நகராட்சி நிர்வாகத் துறையில் அரசு பணியிட நியமன முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகத் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதங்களை அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு நேற்று (அக்டோபர் 26) தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தன் தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
