‘8 பேர் அமைச்சர்களாக இருந்தாலும்..’ மாணவன் அகிலனுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி அரசு பேட்டி

Published On:

| By Pandeeswari Gurusamy

vanni arasu

தமிழகத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த எட்டு பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை, என மாணவன் அகிலன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.

கோவையில் சாதிய ரீதியான துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் அகிலனின் உடலை இன்று பெற்றோர் பெற்று அடக்கம் செய்தனர்.இந்நிலையில் மாணவன் அகிலனின் இல்லத்துக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

இறுதி ஊர்வலத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,” முதல்வர் வழிகாட்டுதல் படி அகிலனுக்கு வீர வணக்கத்தை செலுத்தி இருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேற்று எஸ்சி , எஸ்டி சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கின்றார்.

முன்னதாக நீதியரசர் சந்துரு அறிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் பேசியதை சுட்டிக்காட்டிய அவர் பள்ளிகளில் நீண்ட காலமாக இருக்கின்ற சாதிய பாகுபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, இதை களைய எல்லா வேலையும் செய்ய வேண்டும். பள்ளிகளில் சாதிப்பெயர் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானது. முதன்மையானது. அதை எடுப்பதற்கான முயற்சிகளை செய்வோம்.

ADVERTISEMENT

மாணவன் அகிலன் வழக்கில் சிபிசிஐடி விசாணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதில் யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய சாதி பின்புலம் இருந்தாலும் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள்.

முதல் நாளில் இருந்து தோழர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன், காவல்துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சென்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ADVERTISEMENT

சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அனைத்து சந்தேகங்களும், பிரச்சனைகளும் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குழப்பங்கள், தயக்கங்கள் இருப்பதால் முழுமையான விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.”என்றார்.

மேலும் பேசிய அவர் நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த போராட்ட களத்தில் இருப்பேன், போராட்டக் களம் என்பது நீதி பெறுவதற்கான இடம். நான் அமைச்சரவையில் இருக்கிறேன், அமைச்சரவைக்குள் இருந்து என்னென்ன முடியுமோ அதை செய்கிறேன். இதில் எந்த இடத்திலும் பின்னடைவு இல்லை , எஸ்சி எஸ்டி சட்டப்படி வேலை வாய்ப்பு பெறப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போராடுகின்றனர். 7 நாட்கள் போராட்டத்திலும் நாங்களும் இருக்கிறோம்.

எல்லா மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். பள்ளி, கல்லூரி வளாகங்களில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முதன்மையானது.

அரசில் எத்தனை அமைச்சர்கள் என்பது கிடையாது, இந்த சமூக கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் சாதி கட்டமைப்பு. எட்டு பேர் அமைச்சராக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை. இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு,சனாதான கட்டமைப்பு கொண்டது, அதை உடைக்க போராடி வருகின்றோம். 8 பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை, போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது.

சாதிய அழுக்குகளை வேர் அறுக்க வேண்டிய தேவை இருக்கிறது, இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சாதிய பாகுபாடு களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கிறது” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share