தேனி சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என சிறை துறை டிஜிபி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “தேனி சிறையிலிருந்து 17 கைதிகள், அங்கிருந்த மூன்று காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சோதனைச் சாவடிகள், வனப்பகுதிகள் மற்றும் அண்டை மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறையில் பாதுகாப்பு குறைபாடுகளோ அல்லது கவனக்குறைவோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஐஜி ஆகியோர் தேனி மாவட்ட சிறைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.”என்றார்.
சினிமாவில் வந்தது போல் கைதிகள் தப்பி உள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்தது போல் நடித்துள்ளனர். அப்போது வந்த சிறைக்காவலரை தாக்கியுள்ளனர். அடுத்தடுத்து 3 காவலர்களை தாக்கி விட்டு தப்பி உள்ளனர். 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில் மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஊழல் மற்றும் கட்சி நிதி வசூல் குற்றச்சாட்டின் காரணமாக நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பார்ட்டி ஃபண்ட்’ எங்கே?’ என்று கேட்டவர்களுக்காக ஒரே ஒரு கோப்பைத் (File) திறந்ததற்கே, முன்னாள் அமைச்சர் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது திமுகவிற்கு மிகப்பெரிய அவமானமாகும். திமுக கைவைக்காத இடமே கிடையாது.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சான்றிதழ்களில் கூட கட்சி நிதி வசூலித்துள்ளீர்கள். ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) என்றால் என்னவென்று பொதுமக்கள் கேட்கிறார்கள். அது வேறொன்றும் இல்லை, குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பள்ளிக் கல்வித்துறை வழங்கும் சான்றிதழை வைத்து, பள்ளிகளை மிரட்டி 400 கோடி ரூபாய் வரை பணம் பறித்திருக்கிறார்கள். தற்போதுதான் பல்வேறு பள்ளிகள் இது தொடர்பாகப் புகார்களை அளித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ள நிலையில், இவர்கள் விட்டுவைத்த பள்ளிகளே எதுவும் இல்லை. பள்ளி நடத்துபவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இப்படி ஒரு சான்றிதழ் இருப்பதே தெரிந்திருக்காது.
ஒரே ஆண்டில் ஒரு சான்றிதழுக்கே 400 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப்பட்டுள்ளது என்றால், மற்ற அனைத்துத் துறைகளிலும் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். ‘மூன்று கோப்புகளையும் திறங்கள், திறங்கள்’ என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? இப்போது ஒரே ஒரு கோப்பைத் திறந்ததற்கே, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மு.க.ஸ்டாலின் ‘இது பழிவாங்கும் நடவடிக்கை’ என்று அறிக்கை கொடுக்கிறார்.
குழந்தைகளின் சான்றிதழில் கூட முறைகேடு செய்து, போலியான சான்றிதழ்களைக் கொடுத்துப் பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்திருக்கிறீர்கள். இதுபோன்ற விவகாரங்களில் பிணையில் (Bail) செல்ல முயலாமல், நேர்மையாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
திமுகவினர் நேற்று நீதிமன்றத்தில், கரூரிலேயே போட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால் கரூரில் நீங்கள் என்ன திட்டமிட்டிருந்தீர்கள்? செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்து முழக்கமிடுகிறார்கள். அப்படியென்றால் கரூரிலேயே இதை முடிக்கலாம் என்று திட்டம் போட்டீர்களா? இதற்காகத்தான் அன்பில் மகேஷ் கரூரில் நாடகமாடினாரா? இந்த அளவிற்கு கேவலமாக திமுகவினர் நடந்துகொள்கிறார்கள். நீங்கள் முதலமைச்சருக்கு சவால் விட்டீர்கள் அல்லவா? , இதுபோல் இன்றும் பல பைல்கள் விசாரணையில் இருக்கிறது. நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் விசாரணையை முன் ஜாமின் கேட்காமல் எதிர்கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.
