அன்பில் மகேஷுக்கு நவ.6 வரை நீதிமன்றக் காவல்.. நள்ளிரவில் நடந்த காரசார விவாதம்- முழு விவரம்!

Published On:

| By Mathi

Anbil Mahesh-DMK

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை (அன்பில் மகேஸ் பொய்யாமொழி) நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் நேற்று (அக்டோபர் 26) தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் போலீசார் அலைக்கழிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு குற்றம்சாட்டினார். இது தொடர்பாக போலீசாருடன் சேகர் பாபு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்

இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷ், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அன்பில் மகேஷின் கைது சட்டவிரோதமானது என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், அன்பில் மகேஷை விசாரணை செய்ய வேண்டியது கட்டாயம் என வாதிடப்பட்டது.

இதையடுத்து அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைத்து செல்லப்படுகிறார்.

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் நள்ளிரவு விசாரணையில் என்ன நடந்தது?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் இரவு 10 மணியளவில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்பில் மகேஷ் தீவிரவாதியா?

அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, “அன்பில் மகேஷ் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசிப்பதற்காக எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இது சரியான நடைமுறை அல்ல. ஏற்கனவே செப்டம்பர் 18-ஆம் தேதி அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளார். அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அன்பில் மகேஷை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என அவரது தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.400 கோடி பணப்பரிமாற்றம்

காவல்துறை தரப்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, “அன்பில் மகேஷை உடனடியாகக் கைது செய்யவில்லை. அவரைக் கைது செய்வதற்காக சென்ற போலீசார் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வெளியே 1 மணி நேரம் காத்திருந்தனர். அதன் பிறகுதான் கைது செய்தனர். முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளது.

இந்த வழக்கில் ஆன்லைன் வழியாகப் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சுமார் ரூ.400 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது.

வழக்கின் அனைத்து விவரங்களையும் ஆராய்ந்த பிறகுதான் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சிகளைக் கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அன்பில் மகேஷை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

ஆளுநரிடம் அனுமதி பெறவில்லை

இதற்குப் பதிலளித்த அன்பில் மகேஷ் தரப்பு, முன்னாள் அமைச்சரான அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகார அமைப்பிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்று வாதிட்டது.

ஆளுநரிடமும் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடமும் உரிய அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், “தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த வழக்கிற்குக் காரணம். பண வசூலிப்பு தொடர்பாக அரசுகுமார் தனது பெயரில் சொத்துகளை வாங்கியதாகத்தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மட்டும் அரசுக் கோப்புகளில் கையெழுத்திடுவதில்லை. பல்வேறு துறை அதிகாரிகளும் கையெழுத்திட வேண்டியுள்ளது. நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை இந்த வழக்கில் பயன்படுத்த முடியாது” என்று உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

200 கேள்விகளுக்குப் பதில் அளித்த பிறகும் கைதா?

அன்பில் மகேஷ் தரப்பில் தொடர்ந்து வாதிடும்போது, “கடந்த ஒன்றரை மாதங்களாக விசாரணைக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் சுமார் 8 மணி நேரம் சோதனை நடைபெற்றுள்ளது. காவல்துறை கேட்ட அனைத்து வருமான வரிக் கணக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. அன்பில் மகேஷின் மாமியாருடைய வங்கிக் கணக்கு மற்றும் வருமான வரி விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்த நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.

கைது செய்வதற்கான புதிய ஆவணங்களோ, புதிய ஆதாரங்களோ காவல்துறையிடம் இல்லை. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது. கைது நடவடிக்கை இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் கைது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று வாதிடப்பட்டது.

கைதுக்கான காரணமே தெரிவிக்கவில்லை

மேலும், “அன்பில் மகேஷைக் கைது செய்யும்போது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைது தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பொதுவான தகவல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அவரிடமிருந்து செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கைது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

அத்துடன், 2024-ஆம் ஆண்டு முதல் அன்பில் மகேஷ் கணையம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைக்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட அக்டோபர் 26-ஆம் தேதி காலையில்கூட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு, முந்தைய அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளிலும் ஆளுநரிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்தது.

அன்பில் மகேஷிடம் நீதிபதி கேட்ட 2 கேள்விகள்

இருதரப்பு வாதங்களும் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்றன.
வாதங்கள் நிறைவடைந்ததும் நீதிபதி சத்தியமூர்த்தி தனது உத்தரவைக் கைப்பட எழுதினார்.

அப்போது அன்பில் மகேஷைப் பார்த்து, “உங்கள் பெயர் என்ன?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு, “அன்பில் மகேஷ்” என்று அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து, “உங்களைக் காவல்துறையினர் துன்புறுத்தினார்களா?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு அன்பில் மகேஷ், “இல்லை” என்று பதிலளித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சிறையில் முதல் வகுப்பு.. உணவு

நீதிமன்றக் காவல் உத்தரவுக்குப் பிறகு அன்பில் மகேஷ் தரப்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்றும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எண்ணெய் மற்றும் புரதம் இல்லாத உணவுகளை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷுக்குச் சிறையில் முதல் வகுப்பு வழங்கவும், அவரது உடல்நிலைக்கு ஏற்ற உணவு வழங்கவும் புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை புழல் சிறைக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share