திருமழிசை மின்மயான சர்ச்சை: அமைச்சர் பொய் சொன்னாரா? நயினார் நாகேந்திரன் விளாசல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார சுடுகாட்டில் மின்சாரம் இல்லாததால் இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உறவினர்கள் பேசிய வீடியோ நேற்று வெளியானது.

இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில், “தவறான தகவல்

ADVERTISEMENT

மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானத்தின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மயானத்தின் உள்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் electrician சரிசெய்ய தாமதமானதால் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் உள்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.” என பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இறந்தவரின் மகன் அமைச்சர் கூறுவது முற்றிலும் தவறான தகவல். ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து நான் தான் எனது தந்தையின் இறுதி சடங்குகளை செய்தேன் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “திருமழிசை மின்மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் அவரது மகன் வினோத் பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகப் பரிதவித்து நின்ற சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. அதிகாரிகளுக்கும் மின்வாரியத்திற்கும் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த உதவியும் கிடைக்காததால், இறுதியில் அந்த மகனே தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது கொடுமையின் உச்சம்.

ADVERTISEMENT

மின்சாரக் கட்டமைப்பை முறையாகப் பராமரிக்கத் தவறிய தனது துறையின் நிர்வாகக் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, “மின்வாரியமே உடனடியாக ஜெனரேட்டர் ஏற்பாடு செய்தது; ஊடகச் செய்திகள் தவறானவை” என்று அப்பட்டமான உண்மைக்குப் புறம்பான தகவலை தவெக அமைச்சர் நிர்மல் குமார்
பதிவிட்டுள்ளார். துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு உரிய நேரத்தில் உதவத் தவறிவிட்டு, அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தித் தனது துறையின் தோல்விகளை மூடிமறைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

“மின்வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை; இதோ எனது சொந்தப் பணத்தில் ஜெனரேட்டர் எடுத்ததற்கான பில் மற்றும் ஜி-பே (GPay) ரசீது” என்று பாதிக்கப்பட்ட மகனே நேரடி ஆதாரங்களுடன் அமைச்சரின் கூற்றை அப்பட்டமாக மறுத்து அம்பலப்படுத்தியுள்ளார். ஆதாரத்தோடு அம்பலப்பட்டு நிற்கும் அமைச்சர் நிர்மல்குமார், தனது துறையின் அலட்சியப் போக்கிற்கும், பொதுவெளியில் பரப்பிய தவறான தகவல்களுக்கும் அந்தச் சாமானியக் குடும்பத்திடமும் தமிழக மக்களிடமும் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share