முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக என்னை கைது செய்துள்ளனர் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதத்தை ஏற்று அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வேப்பேரியில் உள்ள சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், ”ஏற்கனவே 8 மணி நேரம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன். இன்று முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக என்னை கைது செய்துள்ளனர். முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று காவல்துறை அளித்த பதில்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான்.
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம். தனியார் பள்ளிகளுக்கு சரிசமமாக அரசு பள்ளிகளை நடத்தினோம். இடைநிற்றலை ஜீரோ ஆக்கியிருக்கிறோம். இது யார் கண்ணை உறுத்தியது என்று தெரியவில்லை. சட்டத்தின் மூலமாக என் மீதான வழக்கை எதிர்கொள்வேன்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
