அன்பில் மகேஷ் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அன்பில் மகேஷ் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (அக்டோபர் 26) தனது எக்ஸ் பக்கத்தில், ”அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸை கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
