திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அனுமதிகளுக்கு பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில்
- தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition)
- பள்ளி தர உயர்வு (Upgradation)
- DTCP அனுமதி
- இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu-இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 316(5), 318(4) ஆகிய பிரிவுகளுடன் இணைத்து 3(5) பிரிவின் கீழ் முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய பி.டி.அரசகுமாரை கடந்த ஜூன் 27ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமார் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 12 ஆகிய பிரிவுகளையும் வழக்கில் சேர்க்கவும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பிரிவுகள் மாற்ற அறிக்கை (Alteration Report) தாக்கல் செய்தனர். இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் செப்டம்பர் 16ஆம் தேதி அன்பில் மகேஷின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி அன்பில் மகேஷிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மனுத் தாக்கல் செய்தார். அதில், “தனியார் பள்ளிகளிடம் சிலர் தனது பெயரைப் பயன்படுத்திப் பணம் வசூலித்ததாகவே புகாரிலும் சாட்சிகளின் வாக்குமூலங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த விவகாரத்தில் தான் நேரடியாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ”ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின்படி விசாரணைக்கான முன்அனுமதியை ஆளுநரிடம் பெறாமல், தமிழக அரசின் செயலாளரிடம் பெற்றது சட்டப்படி செல்லாது” என்றும் அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஆனால் நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இந்த வாதங்களை நிராகரித்து அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை இன்று அக்டோபர் 26ஆம் தேதி டிஸ்மிஸ் செய்தார். இதனையடுத்து சென்னை அமைந்தகரையில் அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கைது செய்யப்பட்ட முதலாவது திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது
