மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) விடுதலை செய்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, அமித்ஷா குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, அமித்ஷாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியதாகக் குற்றம்சாட்டி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ராகுல் காந்தி லக்னோவில் இருந்து சுல்தான்பூர் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் ஹலியாபூர் பகுதியில் ராகுல் காந்தியின் வாகன அணிவகுப்பில் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் சிலர் காயமடைந்தனர். ராகுல் காந்தி காயமின்றித் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி. இந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தியை விடுதலை செய்து நீதிபதி சுபம் வர்மா தீர்ப்பளித்தார். ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
