வரலாறு இருமுறை நிகழும்! முதல்முறை துன்பியல் நாடகமாக; மறுமுறை கேலிக்கூத்தாக!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

Rajan Kurai Article

ராஜன் குறை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் சிறப்பான தருணங்களில் ஒன்று சென்னையில் பேராசான் கார்ல் மார்க்ஸிற்கு சிலை திறக்கப்பட்டதாகும். கல்கத்தாவிற்குப் பிறகு மார்க்ஸிற்கு அரசால் சிலை அமைக்கப்பெற்ற மாநில தலைநகரம் சென்னைதான் என்பது பெருமைக்குரியது. காரணம் மானுட வரலாற்றில் அரசியல் பொருளாதார தத்துவத்தில் தவிர்க்க முடியாத தடம் பதித்தவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். 

இந்த கட்டுரையின் தலைப்பு கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற ஒரு மேற்கோளாகும். “லூயி போனபார்ட்டின் 18-ஆவது புருமேர்” என்ற அவருடைய ஆய்வுக் கட்டுரையின் முதல் வரிதான் அது. ஹெகல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், ஆளுமைகள் தோற்றம் போன்றவை மீண்டும் நிகழும் என்று கூறியதைச் சுட்டும் மார்க்ஸ், ஹெகல் சொல்ல மறந்தது என்னவென்றால் முதல் முறை துன்பியல் நாடகமாகவும், இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும் நிகழும் என்பதைத்தான் என்றார். ஆங்கிலத்தில் அந்த மேற்கோளின் முழு வடிவம்: Hegel remarks somewhere that all great world historical facts and personages occur, as it were, twice. He has forgotten to add: the first time as tragedy, second time as farce.

ADVERTISEMENT

மார்க்ஸ் இந்த வரியை மூன்றாம் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட லூயி நெப்போலியன் தன் பெரியப்பா நெப்போலியன் போனபார்ட் 1799-ஆம் ஆண்டு பிரெஞ்சு பேரரசராக முடிசூட்டிக்கொண்டதைப் போல, 52 ஆண்டுகளுக்குப் பின் தானும் முடிசூட்டிக்கொண்டதை வர்ணிக்க எழுதினார். இரண்டு நிகழ்வுகளுமே மக்களின் குடியரசிற்கான முன்னெடுப்பை தடம் மாற்றிய நிகழ்வுகள். முன்னவரது முடிசூட்டல் வரலாற்றின் தவிர்க்க முடியாத விபத்தாக நிகழ்ந்த து என்றால், பின்னவரது முடிசூட்டல் வரலாற்றிலிருந்து பாடம் கற்க முடியாத தால் விளைந்த அபத்தம் என்பதே அதன் உட்பொருள்.

சரியாகச் சொன்னால் மக்களாட்சிக் குடியரசின் உருவாக்கம் என்பது மீண்டும், மீண்டும் சில விபத்துக்களை பின்னடைவுகளை சந்திக்கும். அதற்கான காரணம், சமூகத்தில் வேரூன்றியுள்ள பிற்போக்கு சக்திகள் வரலாற்றின் முற்போக்கு ஆற்றலை பின்னிழுப்பதுதான். முதல்முறை பல்வேறு காரணிகளால் அப்படி ஒரு பிற்போக்கு விபத்து நிகழ்ந்துவிடும். அதிலிருந்து விடுபட்டு வரலாறு பயணிக்கும்போது அந்த விபத்தின் முன்மாதிரி ஏற்படுத்திய சுவடுகள் காரணமாக மீண்டும் அதே விபத்து, போதுமான காரணிகளின் அழுத்தம் இல்லாமலேயே அபத்தமான ஒரு வடிவில் நடக்கும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இன்று நிலவும் அரசியல் சூழலை பரிசீலிக்கும் யாரும் கார்ல் மார்க்ஸின் இந்த கூற்றினை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருபத்து மூன்றாண்டுகால (1949-1972) வரலாற்றுப் பயணத்தில் ஏற்படுத்திய திராவிட தன்னுணர்வினை திரைக்கதையாடல்களில் வெளிப்படுத்தும் கதாநாயக பிம்பமாக விளங்கிய எம்.ஜி.ஆர், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் தி.மு.க-விலிருந்து 1972-ஆம் ஆண்டு பிரிந்து கட்சி துவங்கினார். புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனார். ஒன்றியத்தில் ஆட்சி செய்த இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை ஆதரித்தார். அதன் பிறகு 1977-இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார். இவ்வாறு நிகழக் காரணமான வரலாற்றுக் காரணிகள் பல உண்டு. அவற்றை பொறுமையாக ஆராய வேண்டும்.

அவர் மரணமடைந்த பின் அவருடன் திரையில் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக அறிமுகம் செய்யப்பட்ட ஜெயலலிதா கட்சித் தலைமையை கைப்பற்றினார். இந்திய அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் விபத்தான ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலையில் முதல்வரானார். பல்வேறு பிற்போக்கு சக்திகள் அவரை தாங்கிப் பிடித்து மீண்டும், மீண்டும் ஆட்சியில் அமர்த்தின.

ADVERTISEMENT

அவரும் 2017-ஆம் ஆண்டு மரணமடைந்த பின் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியால் அ.இ.அ.தி.மு.க பலவாறாக பிளக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டது. அந்த நிலையில்தான் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு கதாநாயக பிம்பமாக நடிகர் விஜய் கட்சி துவங்கி அபத்தமான விபத்தாக, வரலாற்று மறுநிகழ்வு போல, கேலிக்கூத்தாக ஆட்சிக்கு வந்துள்ளார். அவரால் மருந்துக்குக் கூட அரசியல்வாதியாக நடந்துகொள்ள முடியவில்லை. ஆட்சி செய்யவும் இயலவில்லை. திரைபிம்பமாகவே, பொம்மை அரசராகவே உலா வருகிறார்; நாடு நாசமாகிக் கொண்டுள்ளது.

அது மட்டுமல்ல. நடிகர் விஜய் முதல்வராகிவிட்டதால் மேலும் பலர் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது ரசிகர் மன்றங்களைத் திரட்டி வருகிறார். சிவகார்த்திகேயனும் ஒருவேளை அரசியல் ஆர்வம் கொண்டுள்ளாரோ என்று பலர் நினைக்கிறார்கள். விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பல சாத்தான்கள் உருவாகி வருவதாகப் பேசியுள்ளார். டில்லிக்கு போகும் நடிகர்களை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மற்றொருபுறம் விஜயுடன் திரையில் கதாநாயகியாக நடித்த திரிஷாவிற்கு அரசியல் ஆர்வம் இருப்பதாகவும், அவர் தவெக-வில் இணையலாம் என்றும் தொடர்ந்து பலரால் கூறப்பட்டு வருகிறது. அவர் பொதுவெளியில் விஜயுடன் சேர்ந்து காட்சி தருவது, இந்த வாரம் திடீரென கோவையில் ரோட் ஷோ நடித்தியிருப்பது என பல சம்பவங்கள் அவரது அரசியல் நுழைவு குறித்த கணிப்புகளை உயிரோட்ட த்துடன் வைத்துள்ளன. விஜயும் சரி, திரிஷாவும் சரி திட்டவட்டமாக எதையும் கூறுவதில்லை என்பதால் யூகங்கள் நீடிக்கின்றன.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டிற்கு உள்ளேயும் சரி, வெளியேயுள்ள அரசியல் ஆர்வலர்களுக்கு இடையேயும் சரி, ஏற்படும் முக்கிய கேள்வி ஒன்று இருக்கிறது. எதனால் சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு என வலுவான தன்னுணர்வு மிக்க அடித்தட்டு மக்களின் அரசியல் உருவான தமிழ்நாட்டில் இப்படி அதற்கு நேர் மாறாக திரை நட்சத்திரங்கள் தலைவர்களாகும் நிலை உருவாகிறது?

திரைப்பட த்தில் கதாநாயகனாக ஒருவர் நடித்துவிட்டால் அவர் உடனே அரசியல் தலைவராக மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைப்பது எப்படி சாத்தியமாகிறது? இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பிரபலமான கதாநாயக நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் தமிழ்நாடு போல அரசியல் தலைவராக, முதல்வராக இயல்வதில்லையே? அப்படியானால் தமிழ்நாட்டில் அரசியல் தன்னுணர்வு அதிகமா, குறைவா? இந்த கேள்விக்கு நாம் பொறுமையாக வரலாற்றில் விடை தேட வேண்டும்.

திராவிட தமிழர் தன்னுணர்வு உருவாக்கம்!

பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் பொதுமன்றத்தில், அச்சு ஊடக வெளிப்பாடுகளில், படித்தவர்களிடையே திராவிட தமிழர் என்ற தன்னுணர்வு உருவாக வலுவான வரலாற்றுக் காரணிகள் இருந்தன. நீண்ட காலமாகவே சமஸ்கிருத மொழியின் மேலாதிக்கத்திற்கும், தமிழுக்கும் இருந்த முரண்பாடு முக்கியமானது. அதன் சமூகவியல், அரசியல் வடிவங்களாக சமஸ்கிருதம் பயின்ற வைதீக பார்ப்பனர்களுக்கும், அவைதீக மரபுகளுக்கும், பார்ப்பனரல்லாதோரின் சைவ, வைணவ வெளிப்பாடுகளுக்கும் நீண்ட காலம் நிலவிய முரண்பாடுகளும் முக்கியமானவை.

அத்துடன் நவீன அரசு நிர்வாகம், நீதிபரிபாலனம், கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஆங்கிலம் பயின்ற பார்ப்பனர்களின் மேலாதிக்கம் கடுமையாக இருந்ததால், பார்ப்பனரல்லாதோரின் அரசியல் அணிசேர்க்கை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்தது. வட நாட்டில் சமஸ்கிருதமயமான இந்தி மொழி உருவாகி அது தேசிய மொழியாக முன்னிறுத்தப்பட்டபோது, தமிழ்நாட்டின் சுயாட்சிக்கான குரல் உருவானது. அப்போதுதான் திராவிட தமிழர் தன்னுணர்வு பார்ப்பனீய, வடநாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான அணிசேர்க்கையாக வெகுமக்களிடம் பரவத் துவங்கியது.

வெகுமக்களிடம் அரசியலை கொண்டுசெல்வதில் பேராற்றல் படைத்த தந்தை பெரியாரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் அரசியல் தன்னுணர்வை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றின. பெரியாரின் குடியரசு நோக்கு இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று இந்திய அளவில் பார்ப்பன-பனியா மேலாதிக்கத்திற்கு எதிராக அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அணிசேர்க்கையை சாத்தியமாக்கி இந்தியக் குடியரசை மக்களாட்சி விழுமியங்களுடன் தகவமைப்பது. இரண்டாவது, வட நாட்டின் முஸ்லீம் எதிர்ப்பு என்ற முகமூடியாலோ, தேச ஒற்றுமை என்ற முகமூடியாலோ பார்ப்பன இந்து அடையாளம், சமஸ்கிருத இந்தி அடையாளம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் திணிக்க விடாமல் தமிழ்நாட்டின் சுயாட்சியை சாத்தியப்படுத்துவது.

வெகுமக்கள் அணிசேர்க்கை!

சிந்தனைப் பரவலாக மக்களிடம் பிரசாரம் செய்வது வேறு; அவர்களை அமைப்பாகக் கட்டி உருவாக்குவது வேறு. பல்வேறு ஜாதி அடையாளங்களில் சிக்கியிருந்த மக்களை தனி மனிதர்களாக உணர வைப்பது, ஒரு புதிய பொது அடையாளத்தில் அணிதிரட்டுவது என்பது மிகவும் சவாலான காரியம் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. அதிலும் 85% பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்னும்போது அவர்களை எப்படி உடனடியாக மக்களாட்சிக்குப் பயிற்றுவிக்க முடியும்?

இந்த கேள்வியை எதிர்கொள்ளும் முகமாகத்தான் திராவிட முன்னேற்ற கழகம் மேடை நாடகங்களையும், அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களையும் பயன்படுத்தத் துவங்கியது. திரைப்படங்கள் குறிப்பாக மிகுந்த ஆற்றலுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கும் தன்மையைக் கொண்டிருந்தன. எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு திரையில் தோன்றி மறையும் காட்சிகளைக் கருத்தில் கொண்டு பார்ப்பது புதிய தன்னிலையாக்க பயிற்சியாக மாறியது. அண்ணா, கலைஞர் ஆகியோரது வசனங்களும், பாடல்களும் பல்வேறு முக்கிய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்தன.

நவீன சமூக உருவாக்கத்தில் இரண்டு அம்சங்கள் தேவை. ஒன்று அக உலகில் ஒவ்வொருவரும் தனித்த உணர்வுகளும், உணர்ச்சிகளும் உள்ள தனி நபர்களாக தங்களை நினைக்க வேண்டும். அதே சமயம் புற உலகில் ஒன்றுபட்டு தங்கள் சமூக வாழ்வை புதிய நெறிகளின்படி தகவமைப்பவர்களாகவும் மாற வேண்டும்.

கலைஞரின் வசனங்களை பராசக்தி திரைப்பட த்தில் திறம்பட பேசிய சிவாஜி கணேசன், அக உலக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகமாக மாறி தனி நபர் அச்சை வலுப்படுத்தினார். கலைஞரின் திரைக்கதையில் மந்திரி குமாரி, மலைக்கள்ளன் படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் மக்களை ஒன்றுதிரட்டி புறவெளி மாற்றத்தை உருவாக்கும் சாகச நாயகராக மாறினார். இருவரும் இணைந்து தமிழ்நாட்டில் வெகுமக்களை நவீன தன்னிலைகளாக மாற்றும் முக இயந்திரத்தை உருவாக்கினர் என்று கோட்பாட்டு ரீதியாகக் கூறலாம்.

அரசியல் களத்தில் பார்ப்பனரல்லாதோர் அல்லது திராவிடர் என்ற அடையாளம் சமூகத்தின் உள்முரணை குறிப்பதாக அமைந்தது. தமிழ் அடையாளம் என்பது பொது அடையாளமாக அமைந்தது. எனவே திராவிட த் தமிழர் என்ற சேர்க்கை சமூகத்தை உள்முரண் கொண்ட முழுமையாக உணரச் செய்தது. இந்த தன்னுணர்வு தமிழ்நாட்டின் முற்போக்கு அரசியலின் அடித்தளமானது.

அதே நேரத்தில் இதனை ஒட்டி திரையில் உருவாகிய கதாநாயக பிம்ப வெளியில், சாகச கதாநாயகன் என்ற எம்.ஜி.ஆர் உருவகம் மற்றொரு பொது அடையாளத்தின் சாத்தியமாக, தற்காதலின் வெளிப்பாடாக அமைந்தது. எம்.ஜி.ஆர் தி.மு.க நடிகராகவே பயணித்தது தன்னுணர்வை தற்காதலாக மாற்றும் சாத்தியத்தை உருவாக்கியது.

தமிழ்நாட்டின் சுயாட்சியை மட்டுமன்றி, பல்வேறு மக்கள் நல விழுமியங்களையும் அகில இந்திய அளவில் முன்னெடுக்கும் ஆற்றலுடன் தி.மு.க வளர்ந்தபோது, கதாநாயகனின் தற்காதல் இயந்திரத்தைப் பயன்படுத்தி தி.மு.க-வை பிற்போக்கு சக்திகளால் பிளக்க முடிந்தது. குறிப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பார்ப்பனீய கருத்தியல் கட்டுமான ங்களை தகர்ப்பதில் முக்கிய பங்காற்றியதால் அந்த வரலாற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்தி அரசியல் நீக்கம் செய்ய திரைக்கதாநாயக பிம்பத்தின் தற்காதல் ஆற்றலை பயன்படுத்தும் சாத்தியம் ஆதிக்க சக்திகளால் முன்னெடுக்கப்பட்டது.

தி.மு.க – அ.இ.அ.தி.மு.க: வேறுபாடு என்ன?

தி.மு.க அரசியலில் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் பிரிக்க முடியாத கோட்பாட்டு இணைவைக் கொண்டவை. இதற்குக் காரணம் இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல், பல்வேறு மக்கள் நல திட்டங்களின் மூலம் வளர்ச்சியின் பலன்களை பகிர்ந்தளிப்பதற்கான தன்னுணர்வுதான். அ.இ.அ.தி.மு.க தேர்தல் களத்தில் தி.மு.கவை சந்திக்க வேண்டும் என்பதால் மக்கள் நல திட்டங்களை புறக்கணிக்க இயலாது. ஆனால், மாநில சுயாட்சி, சமூக நீதியின் பல்வேறு பரிமாணங்களைப் பொறுத்தவரை ஒன்றியத்துடன் சமரசம் செய்துகொள்ளத் தயங்காது.

இந்த காரணங்களால், சமூகத்தில் பிற்போக்கு மனோவியல் கொண்டவர்களும் திராவிட தமிழர் என்ற அடையாளத்தில் தங்கள் அரசியலைத் தொடர அ.இ.அ.தி.மு.க இடமளித்தது. பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டும் விலாங்கு மீன் அரசியலை கதாநாயக பிம்ப அ.இ.அ.தி.மு.க அரசியல் துவங்கி வைத்தது.கடந்த ஐம்பதாண்டுகால அரசியலைக் கவனமாக  ஆராயும் யாராலும் இந்த வேறுபாடுகளைத் துல்லியமாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.

சுருங்கச் சொன்னால் திராவிட தமிழர் தன்னுணர்வு தமிழ்நாட்டு அரசியலை முழுவதும் கொண்டு செலுத்தும் விசையாக மாறிவிடாமல், கதாநாயக பிம்ப அரசியலை தடைக்கற்களாக மாற்றுவதே பிற்போக்கு சக்திகளின், ஒன்றிய ஆதரவு சக்திகளின் முயற்சியாக இருந்து வந்துள்ளது.

அரசியல் சொல்லாடலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றவல்ல மார்க்ஸீய, பொதுவுடமை சக்திகளும் இந்திய தேசிய கட்டுமானத்தை ஏற்றுக்கொண்டு வர்க்க முரணை மையப்படுத்தி பேசியதால் சமூக நீதி, மாநில சுயாட்சி வடிவங்களை முக்கிய அச்சாக க் கொண்ட தி.மு.க அரசியலை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. அதற்கான வெகுமக்கள் அரசியல் சார்ந்த கோட்பாட்டுத் தளம் உருவாக்கப்படவில்லை.

அதனால் முரணரசியல் களத்தில் தி.மு.க-அ.இ.தி.மு.க இரண்டும் ஒரே சமூகவியல் தளத்தில் இயங்குகின்றன என்று கூறுவதும், இரண்டிற்கும் அரசியல் தன்னுணர்வு என்ற அளவில் நிலவும் பாரதூரமான வேறுபாட்டைக் கவனிக்காமல் புறக்கணிப்பதும் அரசியல் ஆய்வாளர்களிடையே இயல்பான போக்காக மாறியது எனலாம். அதாவது மேலோட்டமான ஒப்புமைகளைப் பேசுவார்கள். ஆழமான வேறுபாடுகளைப் புறக்கணிப்பார்கள். முரணரசியல் களத்தில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது என்று கூறி கருத்தியலுக்கே வேலையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

கதாநாயக பிம்பத்தின் கற்பித இறையாண்மை

கதாநாயக பிம்பம் திரையில் எதிர்ப்பவர்களை எல்லாம் வெற்றி கொள்ளும் தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர் எதிர்ப்பவர்களைக் கொல்ல மாட்டார். திருத்துவார்; அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்பார். அதன் பிறகு உருவான நாயக பிம்பங்கள் வன்முறைக்கு அஞ்சாதவர்கள். அவர்கள் தீயவர்கள் என்று நினைப்பவர்களை வெட்டி வீழ்த்தி, சுட்டுத்தள்ளி சென்று கொண்டே இருப்பார்கள். இவ்வாறு கொலை செய்யும் உரிமை என்பது அரசனின், அரசின், இறையாண்மையின் உரிமை. இந்து புராணங்களில் இறைவனின் உரிமை.

இந்த வன்முறை நாயகர்களின் தற்புகழ்ச்சி, தற்காதல் வசனங்கள் பஞ்ச் டயலாக் என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. அவை ரசிகர்களையும் அந்த தற்காதலில் பங்கேற்க வைக்கின்றன. அதன் மூலம் அவர்களது எல்லைக்குட்பட்ட, சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட சமூக தன்னிலைகளை கற்பனையாக தளர்த்திக் கொள்ள மக்களுக்கு உதவுகின்றன. இது சில நேரங்களில் சமூக இயக்கத்திற்கான ஆற்றலையும் வழங்க க் கூடியதுதான் என்றாலும், பெரும்பாலும் கற்பிதமான சுயத்தை உருவாக்கிக்கொள்ளவே உதவுகின்றன. அதிலும் நடைமுறை சாத்தியமற்ற வன்முறைக் காட்சிகள் முழுக்கவும் கற்பித உலகினையே உருவாக்குகின்றன.

இந்த நிலையில் ஒரு இளைஞன் முன், இளம்பெண் முன் இரண்டு சாத்தியங்கள் உள்ளன. அரசியல் தன்னுணர்வின் பாதை என்பது நடைமுறை அன்றாட வாழ்வில் உழைப்பை, முயற்சியை, அரசியல் அணிசேர்க்கையின் கடினமான பாதையை முன்வைக்கிறது. கதாநாயக பிம்பத்தின் தற்காதலில் பங்கேற்பது என்பது போதைப் பொருட்களைப் போல ஒரு தப்பித்தலை, சுகமான தருணங்களைத் தருகிறது. அரசியலை விட அரசியல் நீக்கமே வசதியானது; அதை அரசியல் நீக்கமாக உணராமல் ஒரு நாயக பிம்ப வழிபாடாக மாற்றிக்கொள்வது தன்னையே ஏமாற்றிக் கொள்ள வசதியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் நிச்சயம் வேறெந்த இந்திய மாநிலத்தையும்விட அரசியல் தன்னுணர்வு அதிகம் என்பதில் ஐயமேயிருக்க முடியாது. ஆனால் அந்த தன்னுணர்வு முழுமையான அரசியல் அதிகாரத்தை ஈட்டித் தருவதில்லை என்ற ஏக்கம் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக இந்திய ஒன்றியத்துடன் முரண்படும்போது இறையாண்மைப் பற்றாக்குறை இருப்பதை உணர முடிகிரது. அப்படியானால் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதுதான் தீர்வு. ஆனால் பலவீனமான உளவியல் உடனடியான கற்பனைத் தீர்வையே நாடுகிறது.

தமிழ்நாட்டில் போதை மருந்துகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள். மெத் என்ற கடும் போதைப் பொருள் தவெக நிர்வாகி ஒருவரிடம் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசாயன போதைக்கெல்லாம் சளைக்காத போதைதான் கதாநாயக பிம்பம் தரும் தற்காதல் போதை. தமிழ்நாட்டை கதாநாயக போதையிலிருந்து மீட்பது அதன் அரசியல் தன்னுணர்வை வளர்த்தெடுக்க இன்றியமையாதது என்றுதான் கூற வேண்டும்.

ஒரு அரசியல் தலைவராக, ஆட்சியாளராக நடிகர் விஜயால் செயல்பட முடியவில்லை என்ற உண்மையை அனைவரும் தயக்கமின்றி பேசுவது இந்த போதை தெளிய பெருமளவு உதவக்கூடும். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா அரசியல் துன்பியல் நாடகமென்றால், விஜய் அரசியல் கேலிக்கூத்தாகவே அரங்கேறுகிறது.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share