கோரத் தாண்டவமாடிய வங்கக்கடல்.. தலைமுறைகள் மறக்காத பேரழிவுப் புயல்கள்!

Published On:

| By Mathi

Bay of Bengal- Cyclones

இன்று வங்கக்கடலில் புயல் உருவானால், அது எந்தத் திசையில் நகரும், எப்போது கரையைக் கடக்கும், எவ்வளவு வேகத்தில் காற்று வீசும் என்பதை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவிக்கிறது. ஆனால் வானிலை ஆய்வு மையங்களோ, செயற்கைக்கோள்களோ, புயலைக் கண்டறியும் ரேடார்களோ இல்லாத காலத்தில் கடல் சீற்றத்தையும் பேரழிவுகளையும் தமிழர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடினால், தமிழர்களின் தொன்மையான இலக்கியங்களில் இடம்பெறும் கடல்கோள் பற்றிய பதிவுகள் நம்மை முதலில் அழைத்துச் செல்கின்றன.

கடல் காவு கொண்ட குமரிக்கண்டம்

கன்னியாகுமரிக்குத் தெற்கே பரந்து விரிந்திருந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியதாகத் தமிழ் மரபில் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இந்த நிலப்பரப்பு குமரிக்கண்டம் என்றும் லெமூரியா என்றும் அழைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழ் இலக்கியங்களிலும் உரைநூல்களிலும் கடல் நிலப்பரப்பைக் கொண்ட நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தென்பகுதி கடலால் அழிந்ததாகக் கூறப்படும் மரபு முக்கியமானது.

இறையனார் அகப்பொருள் உரையில் இடம்பெறும் முச்சங்க மரபின்படி, பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் முதல் தமிழ்ச் சங்கம் தென்மதுரையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அந்தத் தென்மதுரை கடலால் அழிந்த பின்னர், பாண்டியர்கள் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை நடத்தியதாகவும், கபாடபுரமும் கடல்கோளுக்கு இரையான பின்னர் இன்றைய மதுரையில் கடைச்சங்கம் நடைபெற்றதாகவும் தமிழ் மரபு விவரிக்கிறது.

இவை தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான பதிவுகள். ஆனால் தென்மதுரை, கபாடபுரம் ஆகிய நகரங்கள் எந்த ஆண்டில், எந்த இயற்கைப் பேரிடரால் அழிந்தன என்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது வரை இல்லைதான்..

ADVERTISEMENT

அதேபோல, குமரிக்கண்டம் என்ற பெயருடன் பின்னாளில் இணைக்கப்பட்ட லெமூரியா கண்டக் கோட்பாடும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடல் மட்ட உயர்வால் பழைய கடலோர நிலப்பரப்புகள் நீரில் மூழ்கியுள்ளன என்பது அறிவியல் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வு.

பூம்புகாரை விழுங்கிய கடல்

கடல்கோள் பற்றிய தமிழர் பதிவுகள் தென்மதுரையோடு முடிந்துவிடவில்லை. சோழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினம் கடலால் அழிக்கப்பட்டதாக மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.

இவ்வாறு தென்மதுரை, கபாடபுரம், பூம்புகார் எனத் தமிழ் இலக்கியங்கள் கடலால் அழிந்த தமிழ் நிலங்களையும் நகரங்களையும் பற்றிய தரவுகளைப் பதிவு செய்துதான் வைத்துள்ளன.

இவை அனைத்தையும் புயல்களால் ஏற்பட்ட பேரழிவுகள் என்று கூற முடியாது. ஆனால் அனைத்தும் ”கடல்சார்” நிகழ்வுகளின் விளைவுகள்தான்.

வானிலை கண்காணிப்பு முறை

இந்தத் தொன்மையான மரபுகளிலிருந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னர்தான்.. எத்தனையோ பேரரசுகளையும் சாம்ராஜ்யங்களையும் இந்த நிலம் கண்ட பின்னர், சுமார் 241 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரின் ஆதிக்கக் காலத்தில் இந்திய நிலப்பரப்பில் வானிலையை முறையாகக் கண்காணிக்கும் முயற்சிகள் தொடங்கின.

1785-ஆம் ஆண்டு கல்கத்தாவிலும், 1793-ஆம் ஆண்டு சென்னையிலும் வானிலை மற்றும் வானியல் கண்காணிப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அப்போது இந்தியா முழுவதற்குமான ஒருங்கிணைந்த வானிலை ஆய்வுத் துறை செயல்படவில்லை.

19-ஆம் நூற்றாண்டில் வங்கக்கடலில் உருவான புயல்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின. குறிப்பாக 1864-ஆம் ஆண்டு கல்கத்தாவைத் தாக்கிய புயல்தான் புயல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்க வேண்டிய அவசியத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது.

1864-ஆம் ஆண்டு அக்டோபரில் கல்கத்தாவையும், நவம்பரில் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தையும் அடுத்தடுத்து இரண்டு கடுமையான புயல்கள் தாக்கின. ஏராளமான உயிரிழப்புகளும் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டன. இதையடுத்து 1865-ஆம் ஆண்டு புயல் எச்சரிக்கை முறையை உருவாக்குவதற்காக ஆங்கிலேய அரசு ஒரு குழுவை அமைத்தது. அதன் பரிந்துரையின்படி கல்கத்தா துறைமுகத்தில் இந்தியாவின் முதல் புயல் எச்சரிக்கை முறை நடைமுறைக்கு வந்தது.

இதற்கிடையே 1866 மற்றும் 1871-ஆம் ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததும் வானிலை ஆய்வுகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை மேலும் அதிகரித்தது.

இந்தப் பின்னணியில்தான் 1875-ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department – IMD) உருவாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வானிலை ஆய்வுப் பணிகள் ஒரே மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதன் முதல் வானிலை அறிக்கையாளராக ஹென்றி பிரான்சிஸ் பிளான்ஃபோர்ட் நியமிக்கப்பட்டார்.

1878-ஆம் ஆண்டு தினசரி வானிலை அறிக்கைகள் வெளியிடப்படத் தொடங்கின. 1886-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்துத் துறைமுகங்களுக்கும் புயல் எச்சரிக்கை முறை விரிவுபடுத்தப்பட்டது. 1891-ஆம் ஆண்டு முதல் புயல்கள், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் குறித்த விரிவான விவரங்கள் India Weather Review அறிக்கைகளில் இடம்பெறத் தொடங்கின.

இதிலிருந்துதான் இந்தியாவில் புயல்களின் வரலாற்றைத் தொடர்ச்சியான வானிலை ஆய்வுப் பதிவுகளின் அடிப்படையில் ஆராய்வதற்கான முக்கியமான காலகட்டம் தொடங்குகிறது.

1891-ம் ஆண்டு முதல் வங்கக்கடலில் உருவான புயல்கள் எத்தனை?

1875-ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறை உருவாக்கப்பட்டது. ஆனால் புயல்கள் குறித்த முறையான புள்ளிவிவரங்கள் 1891-ஆம் ஆண்டிலிருந்துதான் கிடைக்கின்றன.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) வெளியிட்டுள்ள ஆய்வின்படி, 1891 முதல் 2000 வரையிலான 110 ஆண்டுகளில் வங்கக்கடலில் மட்டும் 1,087 முறை காற்றழுத்த மாற்றங்களால் புயல் உருவாகக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளன.

இவற்றில் 635 முறை காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகியுள்ளன. அதாவது, கடலில் காற்றும் மேகங்களும் ஒரு பகுதியில் திரண்டு, மழையையும் பலத்த காற்றையும் ஏற்படுத்தக்கூடிய நிலை உருவானது. ஆனால் இவை அனைத்தும் புயல்களாக மாறவில்லை.

279 முறை புயல்கள் உருவாகியுள்ளன. மேலும் 173 முறை தீவிரமான புயல்கள் உருவாகியுள்ளன. அதாவது, இந்த 110 ஆண்டுகளில் வங்கக்கடலில் மொத்தம் 452 புயல்கள் உருவாகியுள்ளன.

எளிமையாகச் சொன்னால், வங்கக்கடலில் ஆண்டுக்குச் சராசரியாக 10 முறை புயல் உருவாகக்கூடிய வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 4 முறை மட்டுமே புயல்கள் உருவாகியுள்ளன.

இதேபோல, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 1965 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வங்கக்கடலில் ஆண்டுக்குச் சராசரியாக 8 முறை புயல் உருவாகக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 3 முதல் 4 முறை புயல்கள் உருவாகியுள்ளன.

ஆனால் இதே காலகட்டத்தில் அரபிக்கடலில் ஆண்டுக்குச் சராசரியாக 2 முதல் 3 முறை மட்டுமே இத்தகைய வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அல்லது இரண்டு முறை புயல்கள் உருவாகியுள்ளன.

அதாவது, அரபிக்கடலைவிட வங்கக்கடலில்தான் அதிகமான புயல்கள் உருவாகின்றன என்பது வானிலை ஆய்வுத் துறையின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

வங்கக்கடலில் அதிக புயல்கள் உருவாவது ஏன்?

இந்தியாவின் இருபுறமும் கடல்கள் இருக்கின்றன. மேற்கே அரபிக்கடல், கிழக்கே வங்கக்கடல். ஆனால் அரபிக்கடலைவிட வங்கக்கடலில்தான் அதிகமான புயல்கள் உருவாகின்றன. இதற்கு என்ன காரணம்?

முதலில் கடல் நீரின் வெப்பம் முக்கியமான காரணம். புயல்கள் உருவாவதற்குக் கடலின் மேற்பரப்பு நீர் போதுமான அளவு வெப்பமாக இருக்க வேண்டும். வங்கக்கடலில் பல மாதங்கள் கடல் நீர் அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இந்த வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேலே எழுகிறது. அந்த ஈரப்பதமான காற்று மேகங்களாகத் திரண்டு, சாதகமான சூழலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெறுகிறது.

அடுத்ததாக, வங்கக்கடலில் கலக்கும் ஆறுகளின் நீரும் முக்கியமானது. கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி உள்ளிட்ட பெரிய ஆறுகள் வங்கக்கடலில் கலக்கின்றன. இதனால் கடலின் மேற்பரப்பில் உப்புத்தன்மை குறைகிறது. சில நேரங்களில் மேற்பரப்பிலுள்ள வெப்பமான நீர், ஆழத்திலுள்ள குளிர்ந்த நீருடன் எளிதில் கலக்காமல் இருக்க இது உதவுகிறது. இதனால் புயலுக்குத் தேவையான வெப்பம் கடலின் மேற்பரப்பில் நீடிக்க வாய்ப்புள்ளது.

மேலும், பருவமழைக் காற்றுகளும் வங்கக்கடலில் புயல்கள் உருவாவதற்குச் சாதகமாக இருக்கின்றன. குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் காற்றின் திசை, ஈரப்பதம், கடல் வெப்பம் போன்றவை சாதகமாக அமையும்போது புயல்கள் உருவாகின்றன. ஏப்ரல், மே மாதங்களிலும் புயல்கள் உருவாகக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் அனைத்தும் ஒரே அளவுக்கு வலுவடைவதும் இல்லை. கடல் நீரின் வெப்பம் மட்டுமல்லாமல், மேலடுக்கு காற்றின் வேகம், காற்றின் திசை மாற்றம், வளிமண்டலத்தின் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு புயல் எவ்வளவு தீவிரமடையும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் அரபிக்கடலிலும் புயல்கள் உருவாகின்றன. ஆனால் நீண்டகால வானிலைப் பதிவுகளின்படி வங்கக்கடலில்தான் அதிகமான புயல்கள் உருவாகியுள்ளன.

1891-ஆம் ஆண்டுக்கு முந்தைய புயல்களுக்குப் பெரும்பாலும் அதிகாரப்பூர்வப் பெயர்கள் இல்லை. அந்த புயல்கள் உருவாகிய ஆண்டு, தாக்கிய பகுதி ஆகியவற்றின் பெயர்களில்தான் வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றன.

வங்கக்கடலில் உருவாகி பெரும் அழிவுகளை ஏற்படுத்திய புயல்கள்

உலகை உலுக்கிய வங்கக்கடல் புயல்கள்

வங்கக்கடலில் உருவான புயல்கள் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களை மட்டுமல்ல; வங்கதேசம், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளையும் பலமுறை புரட்டிப் போட்டிருக்கின்றன.

குறிப்பாக வங்கக்கடலில் உருவான சில புயல்கள் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து, உலக வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளாகப் பதிவாகியுள்ளன.

1876: பேக்கர்கஞ்ச் புயல் – 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலி

1876-ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் உருவான புயல், இன்றைய வங்கதேசத்தின் பேக்கர்கஞ்ச் பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பகுதி பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் இருந்தது.

புயலின்போது கடல் நீர் பொங்கி எழுந்து கடலோரக் கிராமங்களுக்குள் புகுந்தது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. குடிநீர் ஆதாரங்கள் உப்புநீரால் பாதிக்கப்பட்டன. புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நோய்களும் உயிரிழப்புகளை அதிகரித்தன. இந்தப் பேரழிவில் சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

1942: வங்காளப் புயல் – 15,000 பேர் பலி

1942-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், அன்றைய வங்காள மாகாணத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. இன்றைய மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த புயல் சுமார் 15,000 பேரை காவு கொண்டது.

1964: தனுஷ்கோடியையே விழுங்கிய கடல்

1964-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான கடுமையான புயல், தமிழகத்தின் தென்கோடி முனையான தனுஷ்கோடியை முற்றிலுமாக அழித்தது. டிசம்பர் 22-ஆம் தேதி இரவு தொடங்கி 23-ஆம் தேதி அதிகாலை வரை வீசிய புயலுடன் கடலும் பொங்கி எழுந்தது. கடலோர வீடுகள், கட்டிடங்கள், ரயில் பாதைகள் என அனைத்தும் கடுமையாகச் சேதமடைந்தன. தனுஷ்கோடி என்ற நகரமே சுவடுகள் மிஞ்சாமல் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டது.

அப்போது தனுஷ்கோடி சென்ற பயணிகள் ரயில் கடல் சீற்றத்தில் சிக்கியது. ரயில் பெட்டிகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் பயணித்த ஏராளமானோர் உயிரிழந்தனர்.

ஒருகாலத்தில் இலங்கைக்குச் செல்லும் பயணிகளும் வணிகர்களும் பயன்படுத்திய முக்கியத் துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடி, இந்தப் புயலுக்குப் பின்னர் இன்றுவரை பழைய நிலைக்குத் திரும்பவே இல்லை. ரயில் நிலையம், குடியிருப்புகள், துறைமுகக் கட்டமைப்புகள் அழிந்ததால் அந்த நகரம் வாழ்வதற்குத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் புயலால் தமிழகத்தின் தென்பகுதிகளிலும் இலங்கையின் வடக்குப் பகுதிகளிலும் சேர்த்து 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1970: போலா புயல் – 5 லட்சம் உயிர்களை விழுங்கிய பேரழிவு

1970-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான போலா புயல், அன்றைய கிழக்கு பாகிஸ்தானை, அதாவது இன்றைய வங்கதேசத்தைத் தாக்கியது. நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய இந்தப் புயலின்போது கடல் நீர் பல மீட்டர் உயரத்துக்குப் பொங்கி எழுந்தது. தாழ்வான தீவுகளும் கிராமங்களும் கடல்நீரில் மூழ்கின. வீடுகள், படகுகள், கால்நடைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் புயலில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. உலக வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய புயலாக போலா புயல் இடம்பெற்றுவிட்டது.

1977: திவிசீமா புயல் – ஆந்திராவில் 10,000 பேர் பலி

1977-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான இன்னொரு வலிமையான புயல் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. குறிப்பாக கிருஷ்ணா நதியின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள திவிசீமா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்புயலின் பேரழிவில் சிக்கி 10,000 பேர் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் வரலாற்றில் மிகப்பெரிய புயல் பேரழிவுகளில் ஒன்றாகத் திவிசீமா புயல் இன்றும் நினைவுகூரப்படுகிறது.

1978: மட்டக்களப்பைச் சிதைத்த புயல் – 915 பேர் உயிரிழப்பு

1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைத் தாக்கியது. குறிப்பாக மட்டக்களப்பு, கல்குடா உள்ளிட்ட பகுதிகள் பெரும் அழிவைச் சந்தித்தன. நவம்பர் 24-ஆம் தேதி மட்டக்களப்பு அருகே கரையைக் கடந்த இந்தப் புயலின்போது மணிக்கு சுமார் 170 முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயலில் 915 பேர் உயிரிழந்தனர்.

1991: வங்கதேசப் புயல் – 1.38 லட்சம் பேர் பலி

1970-ஆம் ஆண்டு போலா புயல் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மீண்டு வந்த வங்கதேசத்தை, 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு அதி தீவிர புயல் தாக்கியது. ஏப்ரல் 29-ஆம் தேதி சிட்டகாங் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைத் தாக்கிய இந்தப் புயலில் சிக்கி சுமார் 1.38 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

1999: ஒடிசா சூப்பர் புயல் – 9,893 பேர் பலி

1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கக்கடலில் உருவான சூப்பர் புயல், ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. அக்டோபர் 29-ஆம் தேதி பாரதீப் அருகே கரையைக் கடந்த இந்தப் புயலால் 9,893 பேர் உயிரிழந்தனர். சுமார் 1.57 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2008: நர்கிஸ் புயல் – மியான்மரில் 1.38 லட்சம் பேர் உயிரிழப்பு

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் வங்கக்கடலில் உருவான நர்கிஸ் புயல், மே மாதத் தொடக்கத்தில் மியான்மரைத் தாக்கியது. குறிப்பாக ஐராவதி நதியின் டெல்டா பகுதி பெரும் அழிவைச் சந்தித்தது. இந்தப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் சேர்த்து சுமார் 1.38 லட்சம் பேர். மியான்மரின் நவீன வரலாற்றில் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக நர்கிஸ் புயல் பதிவாகியுள்ளது.

2025: டிட்வா புயல் – இலங்கையை உலுக்கிய பெருவெள்ளம்

2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடல் பகுதியில் உருவான டிட்வா புயல் (Cyclone Ditwah), இலங்கையைப் பெரும் பேரழிவுக்குள் தள்ளியது. நவம்பர் 28-ஆம் தேதி இலங்கையின் கிழக்குக் கடற்கரையைக் கடந்த இந்தப் புயலால் நாடு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.  கண்டி, பதுளை, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மத்திய மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகளால் ஏராளமானோர் உயிரிழந்தனர். கொழும்பு, கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பேரழிவில் 649 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 173 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட இந்தப் பேரழிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ பகுதியாகவோ சேதமடைந்தன. இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளில் ஒன்றாக டிட்வா புயல் பதிவானது.

தமிழ்நாட்டில் ருத்ரதாண்டவமாடிய புயல்கள்

வங்கக்கடலில் உருவான புயல்கள் தமிழ்நாட்டைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கின்றன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புயல்களால் பெரும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

1994: சென்னையைத் தாக்கிய புயல்

1994-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி சென்னையைத் தாக்கிய புயல் பெரும் உயிரிழப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்தப் புயலின் மையப்பகுதி அதாவது புயலின் கண் என்று சொல்லப்படுகிற பகுதி சென்னை மாநகரைக் கடந்தது. இந்த புயலால் 69 பேர் உயிரிழந்தனர்.

2008: நிஷா புயல்- டெல்டா மாவட்டங்களை மூழ்கடித்த பெருவெள்ளம்

2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உருவான நிஷா புயல், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும் வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தியது. நவம்பர் 27-ஆம் தேதி அதிகாலை காரைக்கால் அருகே தமிழக–புதுச்சேரி கடற்கரையைக் கடந்த இந்தப் புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்தது. நிஷா புயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கனமழை, வெள்ளத்தால் 78 பேர் உயிரிழந்தனர்.

2011: தானே புயல் – கடலூரைப் புரட்டிப் போட்ட பேரழிவு

2011-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி தானே புயல் புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. பலத்த காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்தன. வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தென்னை, முந்திரி உள்ளிட்ட நீண்டகாலப் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.

புதுச்சேரியிலும் மின்சாரம், குடிநீர் விநியோகம், சாலைப் போக்குவரத்து ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் கடந்த பிறகும் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டன.

2012: நீலம் புயல் – மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது

2012-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி நீலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடலோரக் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. மரங்கள் சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

2016: வர்தா புயல் – சென்னையை உலுக்கிய பெருங்காற்று

2016-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய காற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடைந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் விழுந்த மரங்களால் போக்குவரத்து முடங்கியது. நகரத்தின் பசுமைப் பரப்புக்கே மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய புயலாக வர்தா நினைவுகூரப்படுகிறது.

2017: ஒக்கி புயல் – குமரி மீனவர்களின் பெருந்துயரம்

2017-ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் இலங்கைக்குத் தென்மேற்கே உருவான ஒக்கி புயல் (தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகி அரபிக்கடல் நோக்கிப் பயணித்தது) கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளக் கடலோரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் பலர் புயலில் சிக்கினர். ஏராளமான மீன்பிடிப் படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் உயிரிழந்ததும் காணாமல் போனதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

2018: கஜா புயல் – டெல்டா மாவட்டங்களைச் சிதைத்த பேரழிவு

2018-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி கஜா புயல் நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. இப்புயலின் தாக்கம் தென் மாவட்டமான திண்டுக்கல் வரை நீடித்தது; பெரும் தென்னை மரங்கள் மற்றும் பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது.

2020: நிவர் புயல் – வட தமிழகத்தில் பெருமழை

2020-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இரவு முதல் 26-ஆம் தேதி அதிகாலை வரை நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

2022: மாண்டஸ் புயல் – மாமல்லபுரம் அருகே சேதம்

2022-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி இரவு முதல் 10-ஆம் தேதி அதிகாலை வரை மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கடலோரப் பகுதிகளில் வீடுகளும் படகுகளும் சேதமடைந்தன.

2023: மிக்ஜாம் புயல்- சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம்

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், தமிழகக் கடற்கரையை ஒட்டி வடக்கு நோக்கி நகர்ந்தது. டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்தது. மிக்ஜாம் புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கவில்லை. டிசம்பர் 5-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்தது. இருந்தாலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெள்ளப் பேரழிவை ஏற்படுத்திய புயலாக இது பதிவாகியுள்ளது.

2024: ஃபெஞ்சல் புயல் – வட தமிழகத்தைப் புரட்டிப் போட்ட வெள்ளம்

2024-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. திருவண்ணாமலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் புயல் கடந்த பின்னரும் வெள்ளப் பாதிப்புகள் நீடித்தன.

காலங் காலமாக புயல்களால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக நம்மால் தடுத்துவிட முடியவில்லை. தனுஷ்கோடியில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ரயில், தானே புயலில் அழிந்த முந்திரித் தோப்புகள், வர்தாவில் வேரோடு சாய்ந்த சென்னை மரங்கள், கஜாவில் வாழ்வாதாரத்தை இழந்த டெல்டா விவசாயிகள், ஒக்கியில் கரை திரும்பாத மீனவர்கள், மிக்ஜாம் புயலில் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை என ஒவ்வொரு புயலும் ஒவ்வொரு தலைமுறையிடம் அழியாத துயரங்களை விட்டுச் சென்றிருக்கிறது.

புயல் என்பது இயற்கையின் நிகழ்வு. காலங்காலமாக இயற்கையின் சீற்றமான இந்தப் புயல்களை மனித சக்தியால் தடுத்து நிறுத்திவிட முடியாதுதான்.. ஆனால் அது மனிதர்களின் வாழ்க்கையைப் பேரழிவாக மாற்றாமல் தடுப்பது அரசுகளின் ஆகப் பெரும் பொறுப்பு.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share