மோடியின் தந்தை குறித்து மல்லிகார்ஜூன கார்கே பேச்சு- பாஜக கொந்தளிப்பு.. நாளை நாடு தழுவிய போராட்டம்!

Published On:

| By Mathi

Kharge Congress- Modi

பிரதமர் மோடியின் தந்தையை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கார்கேவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 26) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற அம்மாநிலத்தின் முதல் முதல்வர் ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றுப் பேசினார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக மத்திய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கார்கே விமர்சித்தார். அவரது பேச்சுக்கு இடையே கூட்டத்தில் இருந்த ஒருவர், மோடி எங்கும் போகமாட்டார் எனக் குறுக்கிட்டார்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த கார்கே, “மோடி என்ன, மோடியின் அப்பனாக இருந்தாலும் போய்த்தான் ஆக வேண்டும்!” என ஒருமையில் பேசினார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக கொந்தளிப்பு

கார்கேவின் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மறைந்த தந்தையைப் பற்றி அவதூறாகப் பேசி கார்கே அரசியல் நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். மோடியையும் அவரது குடும்பத்தினரையும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினும் கார்கேவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கார்கேவின் பேச்சைக் கண்டித்து நாளை (அக்டோபர் 26) நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கார்கே கூட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது?

பாட்னா கூட்டத்தில் கார்கே பேசுகையில், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு போவார்கள் என்றார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர், ”Modi nahi jayega” “மோடி போகமாட்டார்” என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட கார்கே, அவர் மோடிக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கருதி, “Modi ka baap bhi jayega”.. “மோடி என்ன, மோடியின் அப்பனாக இருந்தாலும் போய்த்தான் ஆக வேண்டும்!” என்று ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குறுக்கிட்ட நபரைச் சுற்றிவளைத்த சிலர் அவரைத் தாக்கி அரங்கத்திலிருந்து வெளியேற்றினர்.

அந்த நபரின் பெயர் சந்தோஷ் குமார். பீகாரின் சாப்ரா பகுதியைச் சேர்ந்தவர். கூட்ட அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ்குமார், ”நான் காங்கிரஸ் கட்சியின் தீவிரமான தொண்டர். மக்கள் பெரிய அளவில் கிளர்ந்தெழுந்தால்தான் மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும். அப்படி ஒரு மக்கள் எழுச்சி இல்லாமல் மோடி போகமாட்டார் என்றுதான் கூற முயன்றேன். ஆனால் நான் பேசி முடிப்பதற்குள் என்னுடைய வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டனர். தான் மோடிக்கு ஆதரவாகப் பேசவில்லை; காங்கிரஸ் தொண்டர்கள் தன்னை பாஜக ஆதரவாளர் எனத் தவறாக நினைத்துத் தாக்கிவிட்டனர்” என்றார்.

சந்தோஷ் குமார் தன்னைக் காங்கிரஸ் தொண்டர் என்று கூறியபோதும், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், அவர் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், கார்கே பயன்படுத்தியது ஒரு பேச்சுவழக்குச் சொற்றொடர்தான் என்றும், மோடியின் குடும்பத்தினரை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share