தவெக என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தவெகஇயக்கம் அல்ல ரசிகர் மன்றம்! இது கட்சி அல்ல.. இது கார்பரேட் கம்பெனி! ஆதவ் போன்றவர்களின் அதிகார தோரணை என்னை அச்சப்பட வைக்கிறது!. தமிழ்நாடு இவர்கள் கையில் சென்றால் என்னாகும் என்று எண்ணி பார்க்கிறேன். நெஞ்சம் பதறுகிறது! ஆகவே.. தமிழ் பற்றுக்காகவும்.. தமிழ்நாட்டின் நலனுக்காகவும்.. இந்த போலி கூட்டத்திலிருந்து விடை பெறுகிறேன்! நான் வெளியே வருவது விலகல் அல்ல.. விடுதலை என நாஞ்சில் சம்பத் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் இன்று தனது எக்ஸ் தளத்தில், “தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த ஆதவ் அர்ஜுனாவை நான் குறைத்து பேசியதாக சில குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம்.
தவெக என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது.”என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடைத்தேர்தலையொட்டி தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் நாஞ்சில் சம்பத் பெயர் விடுபட்டது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில் போனால் போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவரிடம் தவெக தலைமை பேசியதாக கூறப்பட்ட நிலையில்,
உப்பைப் போல எளிமையான தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
