தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் இன்று (அக்டோபர் 25) மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் பெரிய மருதுவாக நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்களும், சின்ன மருதுவாக நம்முடைய தங்கம் தென்னரசு அவர்களும் இணைந்து கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் கழகத்தின் சார்பில், என்னுடைய சார்பில் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இந்த நேரத்திலே தெரிவித்து கொள்வதைக் கடமையாகக் கருதுகிறேன்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, “வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும்” என்றேன்.
ஆனால், இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டால், வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலையிலே ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தவெக ஆட்சியில் வாக்களிக்காத மக்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் இன்றைக்குப் புலம்பிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய நிலை என்னவென்று கேட்டால், விலைவாசி ஒரு பக்கத்திலே உயர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. நிர்வாகம் சீர்குலைந்து போயிருக்கிறது. பாலியல் குற்றவாளிகள் இன்றைக்குத் தங்குதடையின்றி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சியைப் பார்த்தாலும் சரி, சோசியல் மீடியாக்களிலே பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரச் செய்திகள் இல்லாத நாளே இன்றைக்கு நாட்டில் இல்லை.
இப்போதெல்லாம் குழந்தைகளைக் கடத்துகிற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மின்தடை ஒரு பக்கம், விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ‘சிங்கப்பெண்’ என்று ஒரு படையை உருவாக்கினார்கள். அந்த சிங்கப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு படை உருவாக்கக்கூடிய நிலையைத்தான் இன்றைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.
முதலமைச்சராக இருக்கக்கூடியவர், ‘இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி’ என்று சொன்னார். இல்லை, இல்லை. மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி என்று நான் சொன்னேன். அது இன்றைக்கு மாறி, பாலியல் வன்கொடுமையா, போதைப்பொருள் நடமாட்டமா என்ற அந்த இரண்டுக்கிடையேதான் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
மேடைக்கு மேடை அவர் (விஜய்) என்ன கத்துறார்னா, ‘தீய சக்தி, தீய சக்தி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். ஆக, அந்தத் தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது.
நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து, இன்றைக்கு நாட்டிலே ஆளுகின்ற அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்குத் தயாராகுங்கள், தயாராகுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
