தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்புதான் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் திண்டுக்கல் ஐ. லியோனி பேசியதாவது: திரைப்படங்களின் கவர்ச்சியில் மூழ்கிக்கிடக்கும் இந்தச் சமுதாயத்தை மீட்கக்கூடிய பகலவன் நமது தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். அப்படிப்பட்ட நல்ல தலைவரின் தலைமையில் இந்த அருமையான திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமகனையும் மணமகளையும் பார்க்கிறேன். மணமகள் சிரித்துக்கொண்டே இருக்கிறார். மணமகன் மிகவும் இறுக்கமாக இருக்கிறார். அவர்களுடைய பெயர்களுக்கு ஏற்றவாறுதான் இருக்கிறார்கள். ‘வைஷ்ணவ்’ என்ற பெயர் வைணவ மதத்தின் கடவுளான பெருமாளைக் குறிக்கிறது. பெருமாளுக்கு ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என இரண்டு அவதாரங்கள் உள்ளன. மணமகன் தனது திருமண வாழ்க்கையில் எப்போது ராமாவதாரம் எடுக்க வேண்டுமோ அப்போது ராமாவதாரமாகவும், எப்போது கிருஷ்ணாவதாரம் எடுக்க வேண்டுமோ அப்போது கிருஷ்ணாவதாரமாகவும் இருந்து, இரண்டு அவதாரங்களையும் சமநிலைப்படுத்தி வாழ வேண்டும்.

தமிழகத்தை ஒளிரும் தமிழகமாக உருவாக்க வேண்டுமென்றால், வைஷ்ணவ் – விகாஷினி தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் ‘ஆதவன்’ என்றும், பெண் குழந்தையாக இருந்தால் ‘உதயகுமாரி’ என்றும் பெயர் சூட்ட வேண்டும். அதன் மூலம் இந்தக் கழகத்தின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். உங்கள் இருவருடைய பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள். எனவே, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்று ராமனுடைய செருப்பு எப்படி அயோத்தியை ஆண்டதோ, அதேபோல நீங்கள் (ஸ்டாலின்) கழற்றி வைத்த செருப்புதான் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால், உங்களுடைய திட்டங்களால் மக்கள் இன்னமும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், அறிவுலகத் திறப்பு, மெட்ரோ ரயில் பயணம் எனப் பல்வேறு திட்டங்களின் பயன்களை அனுபவிக்கும் மக்கள், உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தமிழகத்தில் உங்களுடைய செருப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அதற்காக ஆட்சி செய்பவர் பரதன் என்று நினைத்துவிடாதீர்கள். ராமனுடைய செருப்பு 14 ஆண்டுகள் ஆட்சி செய்ததைப்போல, இந்த ஆட்சி 14 ஆண்டுகள் நீடிக்காது. 14 வாரங்களிலோ, 14 மாதங்களிலோ இந்த ஆட்சிக்கு முடிவுகட்டி, மீண்டும் உதயசூரியனை உதிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு லியோனி பேசினார்.
