தமிழகத்தில் சென்னை, சேலம், திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 25) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் (RSS) அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. சில இடங்களில் கொட்டும் மழையிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழகத்தில் 128 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி தொடர்பாக எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. பிற இடங்களில் நவம்பர் 1-ந் தேதி ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 7 இடங்களில் ஊர்வலம்
சென்னையில் திருவொற்றியூர், கொளத்தூர், எழும்பூர், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டை ஆகிய ஏழு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்றது.
எழும்பூரில் நடைபெற்ற ஊர்வலம் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது. கொளத்தூரில் பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே அணிவகுப்பு தொடங்கியது. ஊர்வலங்கள் நிறைவடைந்த இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன.
சேலத்தில் அணிவகுப்பு
சேலம் குகை மாரியம்மன் கோவில் அருகே தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, தாதகாப்பட்டி கேட் சக்தி காளியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற விஜயதசமி பொதுக்கூட்டத்தில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரேஷாப குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூரில் 5 இடங்களில் பேரணி
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருமுருகன்பூண்டி, குன்னத்தூர், வெள்ளகோவில், கொடுவாய் ஆகிய ஐந்து இடங்களில் அணிவகுப்பு நடைபெற்றது. திருப்பூர் தெற்கில் பலவஞ்சிபாளையம் வேலவன் பள்ளி அருகே மாலை 4 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம், வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் நிறைவடைந்தது. அங்கு மாலை 5 மணிக்குப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம்
நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய ஊர்வலம், பொய்யேரிக்கரை சாலை, பரமத்தி சாலை, பெரியப்பட்டி சாலை, சந்தைப்பேட்டை புதூர், பழைய பேருந்து நிலையச் சாலை வழியாக மீண்டும் பூங்கா சாலையை வந்தடைந்தது.
விழுப்புரத்தில் அணிவகுப்பு
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி வரை நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தென்பாரத தலைவர் வன்னியராஜன் பங்கேற்றார்.
விருதுநகரில் கொட்டும் மழையில் பேரணி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொட்டும் மழையிலும் 100-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். மேல ரதவீதியில் தொடங்கிய ஊர்வலம் பந்தல்குடி சாலை, எம்.எஸ். கார்னர், அகமுடையார் மகால், தெற்குத் தெரு, பழைய பேருந்து நிலையம், காசுக்கடை பஜார், மெயின் பஜார் வழியாகத் திருச்சுழி சாலையை அடைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில இணை செய்தித் தொடர்பாளர் முத்துராமலிங்கம் பேசினார்.
தென்காசியிலும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்ற இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
