அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு- உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்!

Published On:

| By Mathi

AIADMK MLAs- Supreme Court

அதிமுகவில் இருந்து விலகி, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) தள்ளுபடி செய்தது.

சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதும் வெவ்வேறு நடவடிக்கைகள் என்றும், ராஜினாமா செய்துவிட்டதால் ஏற்கெனவே நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் முடிவுக்கு வந்துவிடாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும், தகுதி நீக்க மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் சபாநாயகருக்கு உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எம். சீனிவாசன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது மனுதாரர் தரப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 190(3)(b) பிரிவைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதன் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாக வாதிடப்பட்டது.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சட்டரீதியான குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறிய விவகாரத்தில் குதிரை பேரம், பணம் உள்ளிட்ட ஆதாயங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேபோல, பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடமிருந்து தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும் என்றும், 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. தேர்தலுக்குப் பிறகான குதிரை பேரத்தைத் தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, ஒருவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராகப் பொறுப்பேற்பது அரசியல் நடைமுறையின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிட்டார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விவகாரத்தையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான காவல்துறை விசாரணையையும் தனித்தனியாக அணுக வேண்டும் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஏற்கெனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, “முதல் தகவல் அறிக்கை தொடர்பான விசாரணை நடைபெறட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்று நீதிபதி பாக்சி தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share