அன்பில் மகேஷ் கைது… போலீஸ் விளக்கம்!

Published On:

| By Kavi

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீதும் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையும் மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 240 க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. 8 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ், மனுத்தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் சென்னை அமைந்தகரையில் வைத்து அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்காக வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அன்பில் மகேஷை கைது செய்தது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில், “தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 1.B.T.அரசகுமார், 2.சுரேஷ் மற்றும் 3.ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share