VIDEO: அன்பில் மகேஷை நீதிபதி முன் ஆஜர்படுத்தாமல் அலைகழிப்பதா? போலீசாருடன் சேகர் பாபு வாக்குவாதம்!

Published On:

| By Mathi

Anbil Mahesh- Sekar Babu

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் போலீசார் அலைகழிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு குற்றம்சாட்டினார். இது தொடர்பாக போலீசாருடன் சேகர் பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்பில் மகேஷ் அலைகழிக்கப்படுவது குறித்து சென்னையில் நேற்று இரவு (அக்டோபர் 26) செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது: நீதிபதி நீதிமன்றத்திலே காத்துக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது போல் கொண்டு வந்து, சுற்றிச் சுற்றி வந்து, மீண்டும் சிசிபி அலுவலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, சட்டத்தையும் மதிப்பதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. யாரையுமே அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்களைக்கூட அனுமதிக்கவில்லை. இந்த ஆட்சி எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த அடக்குமுறைகளைக் கடந்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் 78 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறைகள் எவ்வளவு தூரம் தொடர்ந்தாலும், அதை சட்டப்படி சந்திப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் நிற்கும்.

ADVERTISEMENT

சுற்றி சுற்றி அழைத்துச் செல்வது ஏன்?

பத்திரிகையாளர்கள் நீங்களே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு நேராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகத்தான் வண்டி எடுத்தார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியும் காத்திருக்கிறார். வழக்கறிஞர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றிச் சுற்றி வந்து மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே இருக்கின்ற ஊடகத்திற்கும் தெரியாது; எங்களுக்கும் தெரியாது. அவரைத் தனிமையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே விசாரித்து முடித்த பிறகு, மருத்துவத் தகுதிச் சான்றிதழ் வாங்கிய பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால் இந்த ஆட்சியில் அனைத்துமே சட்டத்திற்குப் புறம்பாகவும் நீதிக்குப் புறம்பாகவும் நடக்கின்றன. வேண்டுமென்றே அலைக்கழிப்பதற்காக இப்படி சுற்றிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது

நிச்சயம் கலைஞர் பாணியிலே சொன்னால், ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’. இன்றைக்குக் காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அன்பில் மகேஷ் பொறுப்புள்ளவர். அவர் தாத்தா காலத்திலிருந்து, அப்பா காலத்திலிருந்து தொடர்ந்து அரசியலில் பயணிப்பவர். அவர் எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள மாட்டார். நாட்டை விட்டுச் சென்றுவிட மாட்டார். விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தந்தார். அதன் பிறகும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் வைப்பது?

ஜாமீனைத்தான் ரத்து செய்தார்களே தவிர, அவரைக் கைது செய்யச் சொல்லி எங்காவது சொல்லியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. இவ்வாறு சேகர் பாபு கூறினார்.

போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் அன்பில் மகேஷ்

போலீசாருடன் சேகர் பாபு வாக்கு வாதம்

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share