கைதிகளைக் கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத விஜய் சர்க்கார்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 13 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் பதிவில்,”தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன.

ADVERTISEMENT

இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை!

இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,

ADVERTISEMENT

மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,

தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.

மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!

எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!

ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!

அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே முதல்வரே

  • நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?

கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?

அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம் இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனங்கள்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது!

சினிமாவையே மிஞ்சும் இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த அளவுக்குத் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காவல்துறை வெளியில் இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் தான் அலட்சியம் காட்டுகிறது என்றால் சிறைக்குள் இருக்கும் கைதிகளைக் கண்காணிப்பதிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது.

இத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் சுமார் 17 கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறைத் துறையின் பாதுகாப்பு சீர்குலைந்திருப்பது கேள்விக் குறியாகியுள்ளது.

தொடர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதிசெய்ய தவறி வரும் தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்!

தப்பியோடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக மீண்டும் கைது செய்து, இந்தப் பாதுகாப்புக் குளறுபடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சிறைகளில் கூடுதல் பாதுகாப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share