புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி லட்சுமி நாராயணன், அன்பில் மகேஷ் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை அமைந்தகரையில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்யமூர்த்தி முன் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சிறையில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
