அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை அணிவது குறித்த தமிழக அரசின் ஆலோசனையைக் கைவிட வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று (நவ.1) நடைபெற்ற “தமிழ்நாடு நாள்” விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர் ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்கத் தயாராக இருந்ததாகத் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, , இனி அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் மரபு ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்தப் பேச்சு தற்போது கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாக இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும்; கேள்விக்கு உள்ளாக்கப்படும். இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள், நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சரின் அந்த ஆலோசனையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில், “இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி ரூபாய் கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யார் அவர் என்பதையும், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.









