ஆந்திராவை நோக்கி ‘முரசு’ தீவிர புயல்.. 3 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் கூண்டு!

By Mathi

|

Published on 2 Nov 2026, 2:43 PM

Cyclone Murasu-Andhra

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ தீவிர புயல், சென்னையைத் தாண்டி ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் இன்று (நவம்பர் 2) நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள முரசு தீவிர புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், காவலிக்கு கிழக்கு-தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

மேலும், சென்னைக்கு வடகிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் ஓங்கோலுக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்துக்குத் தெற்கே 220 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலைகொண்டிருந்தது.

ADVERTISEMENT

இந்தப் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11.30 மணி முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர மாநிலம் நெல்லூர்–நர்சாபூர் இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது முரசு புயல் தீவிர புயலாகவே இருக்கும் என்றும், மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், இடையிடையே காற்றின் வேகம் 120 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முரசு புயலின் நகர்வை சென்னை, மச்சிலிப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

இதனிடையே, முரசு புயல் காரணமாகத் தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகளை ஏற்றுவது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 2) பிற்பகல் 1.30 மணிக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் அபாய எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டையும், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டையும் தொடர்ந்து ஏற்றி வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், குளச்சல் துறைமுகங்களுக்கு புயல் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel