ஐடிபிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த இரண்டு நாட்களும் கிளைக்குப் போவதற்கு முன் ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. நவம்பர் 2, 3 ஆகிய இரண்டு நாட்களும் அந்த வங்கியின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். வங்கியின் பெரும்பான்மைப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம்.
ஊழியர்கள் ஏன் கொதிக்கிறார்கள்?
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசும் எல்ஐசியும் சேர்ந்து சுமார் 60 சதவீதப் பங்குகளை வைத்திருக்கின்றன. அந்தப் பங்குகளை விற்றால், வங்கியின் பெரும்பான்மை உரிமை ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்குப் போய்விடும். இந்தத் தனியார்மய முடிவைத்தான் ஊழியர்கள் எதிர்க்கிறார்கள்.
கிளைகளில் வேலை நடக்குமா?
எத்தனை பேர் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கிளைகளில் நேரடிச் சேவைகள் பாதிக்கப்படலாம். அதனால், அவசரமான பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவை வழக்கம்போல் இயங்கும்
வேலைநிறுத்த நாட்களிலும் கீழ்க்கண்ட சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று வங்கி கூறியுள்ளது:
- Go Mobile+ செயலி
- இணைய வங்கிச் சேவை
- UPI
- ஏடிஎம்கள்
- வாடிக்கையாளர் சேவை மையங்கள்
வங்கிப் பிரதிநிதிகள் மூலமாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பிற வங்கி ஏடிஎம்மில் எடுத்தால் கட்டணம் கிடையாது
இந்த இரண்டு நாட்களும் ஐடிபிஐ வாடிக்கையாளர்கள் வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்துக்குப் பணம் தேவைப்பட்டால் அருகில் இருக்கும் எந்த வங்கி ஏடிஎம்மையும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
‘மிரட்டுகிறார்கள்’ என்று புகார்
இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களை வங்கி நிர்வாகம் மிரட்டுவதாக, யுனைடெட் ஃபோரம் ஆஃப் ஐடிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.









