அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரோடு ஷோ நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திரும்ப பெறப்பட்டது.
கரூரில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த முதல்வர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து திமுக ஆட்சியில் அரசியல் கட்சியினர் ரோடு ஷோ நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
அப்போது, இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி கடும் கட்டுப்பாடுகள் தங்கள் கட்சிக்கு மட்டும் விதிக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டியது.
எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தமிழக வெற்றிக் கழக இணை பொதுச் செயலாளரும் அமைச்சருமான சி டி ஆர் நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “ரோடு ஷோக்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்,பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும்.
இந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியம் இல்லாத வகையில் உள்ளது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை ஏற்படும்.
அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் அளித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை. எனவே இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்துவிட்டு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்து புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகனந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை திரும்ப பெறுவதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.









