பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? பழைய குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரியதால் மீனவ மக்கள் அச்சம்!

By Pandeeswari Gurusamy

|

Published on 2 Nov 2026, 4:55 PM

தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டுள்ள சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில், பழமையான மற்றும் பழுதடைந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தற்போது டெண்டர் கோரியுள்ளது.

கடந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், முள்ளிக்குப்பம், முள்ளி மாநகர், மயிலை நொச்சிக்குப்பம் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர். மீனவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் புதிய தலைமைச் செயலகத் திட்டம் கைவிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. அது குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுக்க வில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுமா என்பது குறித்து இதுவரை அரசு தரப்பில் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்காகத் தமிழக அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் இடம்பெற்றிருக்கும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அகற்றத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த டெண்டரைக் கோரியுள்ளது. இதனால், அப்பகுதி மீனவ மக்கள் மீண்டும் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel