குண்டர் சட்டம்… அருண் ஐபிஎஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல்.கே சுதீஷ் எம்பி மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. 

ADVERTISEMENT

இங்கு 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதில் 78 குடியிருப்புகளை சதீஷ் மற்றும் பூர்ண ஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் வர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். 

எம். ஒன் என்ற பெயரில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை உருவாக்க லோகா டெவலப்ஸ் நிறுவனத்துடன் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 

ADVERTISEMENT

இதன்படி 234 குடியிருப்புகளில் 78 வீடுகள் பூர்ண ஜோதிக்கு ஒதுக்கப்பட வேண்டும். 

ஆனால் சந்தோஷ் சர்மா போலியாக கையெழுத்திட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 78 வீடுகளில் 48 வீடுகளை பிறருக்கு விற்று சுமார் 42 கோடி மோசடி செய்து விட்டதாக பூர்ணா ஜோதி சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் சந்தோஷ் சர்மா அவரது மனைவி கல்பனா சர்மா மற்றும் ஊழியர் மாதவராஜன் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

இதில் சந்தோஷ் ஷர்மா மீது 1982 ஆம் ஆண்டின் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் செப்டம்பர் 22, 2025 அன்று உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

அதில் 2019 முதல் 2023 இல் நடந்த சம்பவம் தொடர்பாக 2025-ல் இரண்டு ஆண்டுகள் தாமதமாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் எனது தந்தை அடைக்கப்பட்டுள்ளார்.

ஒரு குற்ற சம்பவத்துக்கு கைதாகி ஜாமினில் விடுதலை ஆகியுள்ள நிலையில் அதே குற்றச்சாட்டுக்கு மேலும் இரு வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் தனது மகள் வர்ஷா சர்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனது கணவருக்கு நான்கு வார ஜாமின் வழங்க வேண்டும் என்று சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், வி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (மே 20) விசாரணைக்கு வந்தது. 

அப்போது குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது யார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த உத்தரவு கொடூரமானது என்றும் நீதி மன்றத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். 

பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் அடுத்த வாரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share