இந்திய கடற்படைக்காக 8 அதிநவீன சிறிய ரக போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கு ரூ.53,866.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (நவம்பர் 2) கையெழுத்திட்டுள்ளது.
இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், புதிதாக 8 போர் கப்பல்களைக் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் (GRSE), கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (GSL) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இன்று இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தத்தின்படி, கார்டன் ரீச் நிறுவனம் 5 போர்க்கப்பல்களையும், கோவா கப்பல் கட்டும் நிறுவனம் 3 போர்க்கப்பல்களையும் கட்ட உள்ளது.
இந்த 8 போர்க்கப்பல்களையும் இந்திய கடற்படையே வடிவமைக்கிறது. அவற்றைக் கட்டுவதற்கான நிறுவனங்கள் போட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திய கடற்படை வடிவமைத்த போர்க்கப்பல்களை, போட்டி முறையில் தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுவது இதுவே முதல்முறை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் கப்பல்களின் சிறப்புகள் என்ன?
புதிதாக கட்டப்படும் போர் கப்பல்களில் அதிநவீன ஏவுகணைகள், ஆயுதங்கள், எதிரிகளின் கப்பல்களைக் கண்டறியும் நவீன கருவிகள் உள்ளிட்டவை பொருத்தப்பட உள்ளன. வான்வழியாக வரும் தாக்குதல்கள், கடலில் எதிரிகளின் போர்க்கப்பல்கள், கடலுக்கடியில் செயல்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் போர்க்கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.
குறிப்பாக, கடல் வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தைப் பாதுகாப்பது, எதிரிகளின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராகப் போரிடுவது, இந்தியக் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளில் இந்தப் போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்படும்.
மேலும், கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது, கடலில் சந்தேகத்துக்குரிய கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும். இந்த 8 போர்க்கப்பல்களும் இந்திய கடற்படையில் இணைக்கப்படும்போது, நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.









