ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று (நவம்பர் 2) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையிலிருந்து தீப்பிழம்புகள் வானுயர எழுந்ததுடன், அடர்த்தியான கரும்புகை வெளியேறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் HPCL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்கட்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. RUF Pitch Oil என்ற எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டியின் அருகே தீ விபத்து ஏற்பட்டது.
தீயின் வேகம் அதிகரித்ததால் ஆலையின் ஒரு பகுதி முழுவதும் செந்நிறமாகக் காட்சியளித்தது. தீப்பிழம்புகள் தொடர்ந்து வானுயர எழுந்தன. கரும்புகையும் வானில் பரவியது. இந்த தீ விபத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள மல்காபுரம், ஸ்ரீஹரிபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.
இதனிடையே தீ விபத்து நிகழ்ந்த பகுதியை விசாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் திலீப் சக்கரவர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “HPCL ஆலையில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டேன். ஆலையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகள் மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழப்பும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இதுகுறித்து இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், பிட்ச் (Pitch) எனப்படும் பெட்ரோலியப் பொருளை சேமித்து வைக்கும் தொட்டியில் நவம்பர் 2-ந் தேதி இரவு சுமார் 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புக் குழுவினர் உடனடியாகத் தீயணைப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீ பரவாமல் குறிப்பிட்ட சேமிப்புத் தொட்டி பகுதிக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டு, சிறிது நேரத்தில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் அனைத்து உற்பத்திப் பிரிவுகளும் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன. பாதுகாப்பு மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உயர்ந்த தரநிலைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் HPCL உறுதியாக உள்ளது. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.










