சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக 96 பழைய குடியிருப்புகளை இடிக்கக் கூடாது என்று மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை நேற்று (நவ.2) வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நந்தனம் கோட்டம், மயிலாப்பூர் கிராமம், பிளாக் எண் 102, ஆர்.எஸ். எண் 4593/33-இல் உள்ள 96 வாரிய வாடகைக் குடியிருப்புகளையும் பிற கட்டடங்களையும் இடிப்பதற்கு, வாரியம் மின்-ஒப்பந்தப்புள்ளி கம் மின்-ஏல அறிவிப்பை (அறிவிப்பு எண் 04/2026-27, நாள் 02.11.2026) வெளியிட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச ஏலத் தொகை (Upset Value) ரூ.41,61,785 (ஜிஎஸ்டி நீங்கலாக). ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க இறுதி நாள் 01.12.2026 ஆகும். இதை மயிலைப் பகுதி பஞ்சாயத்தார்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த இடம் எங்கள் மறுவாழ்விற்கு உரியது
இந்த 3.82 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டடப் பகுதி மட்டுமல்ல. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019-இன் பிரிவு 6, இணைப்பு IV, பிரிவு 5(3)-இன் கீழ், நீண்டகாலக் குடியிருப்புக்கான திட்டப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிய இடம் இதுவே. இது எங்கள் மறுவாழ்விற்காகக் கோரப்பட்ட இடம். இதே இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு அரசாணை வெளியிட்டது எங்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் அநீதியையும் அளித்தது. அந்த அரசாணை இன்று வரை ரத்து செய்யப்படவில்லை. அதை ரத்து செய்யாமலேயே கட்டடங்களை இடிக்க ஒப்பந்தப்புள்ளி கோருவது, எங்கள் மறுவாழ்வு உரிமையைப் புறக்கணித்து, தலைமைச் செயலகத் திட்டத்துக்கு நிலத்தைத் தயார்படுத்தும் முயற்சியே என்று நாங்கள் கருதுகிறோம்.

கண்டனத்துக்கான காரணங்கள்
எங்கள் மறுவாழ்விற்காகக் கோரப்பட்ட நிலத்தில் வேறு திட்டத்துக்கு அரசாணை வெளியிட்டதே நியாயமற்றது. அந்த அரசாணையை ரத்து செய்யாமல் இடிப்புப் பணிகளைத் தொடங்குவது எங்கள் கோரிக்கையைப் புறக்கணிக்கும் செயலாகும்.
இந்தக் குடியிருப்புகளில் தற்போது யாரும் வசிக்கவில்லை. எனவே, அவற்றை உடனடியாக இடிக்க வேண்டிய அவசரம் எதுவும் இல்லை. இந்த இடிப்பு, எங்களுக்கான குடியிருப்புத் திட்டத்துக்கு இக்கட்டடங்களையும் நிலத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பையே அழித்துவிடும்.
இடிப்பு என்பது மீட்க முடியாத நடவடிக்கை. நில ஒதுக்கீடு, அரசாணை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே கட்டடங்களை இடிப்பது, பொதுச் சொத்துக்கு ஏற்படும் இழப்பாகும்.
டிக்கப்படவுள்ள கட்டடங்கள் அனைத்தும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-இன் பிரிவு 4.2-இன்படி இதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், அத்தகைய அனுமதி பெறப்பட்டதாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. அனுமதி பெறாமல் இடிப்புப் பணிக்கு ஒப்பந்தம் கோருவது விதிமீறலாகும்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில், 75 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய இடிப்புப் பணி நடைபெறும்போது தூசு, ஒலி, போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். இவற்றைத் தடுக்க எந்தத் தெளிவான திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
இடிக்கப்படும் கட்டடங்களின் செங்கல், கதவு, ஜன்னல், கம்பி உள்ளிட்ட மீட்புப் பொருட்கள் அனைத்தும் ஒப்பந்ததாரருக்கே சென்றுவிடும். இந்நிலையில், குறைந்தபட்ச ஏலத் தொகையான ரூ.41.6 லட்சம் எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
இடத்தின் எதிர்காலப் பயன்பாடு குறித்தும், எங்கள் மறுவாழ்வு குறித்தும் மயிலை பகுதி பஞ்சாயத்தார்களிடம் எந்தக் கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை.
எங்கள் கோரிக்கைகள்
- ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண் 04/2026-27-ஐ உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
- புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
- கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி முறையான அனுமதி பெறாமல் இடிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
- குறைந்தபட்ச ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்ட முறையை (மீட்புப் பொருட்களின் மதிப்பு உட்பட) வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
- இந்த இடத்தை எங்கள் மறுவாழ்விற்கான நீண்டகாலக் குடியிருப்புத் திட்டப்பகுதியாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- இடம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், பகுதி மக்கள் மற்றும் பஞ்சாயத்தார்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுப்பதுடன், சட்ட வழிமுறைகளையும் நாடுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு மீனவர் பஞ்சாயத்து சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தரப்பில் என்ன விளக்கம்?
இதனிடையே, பட்டினப்பாக்கம் குடியிருப்புகளை இடிப்பது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு நேற்று (நவ. 2) விளக்கம் அளித்துள்ளது.
பட்டினப்பாக்கம் குடியிருப்பு அகற்றம்; உண்மை என்ன ? என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
- 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 96 வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
- குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தலைமைப் பொறியாளர் (CE), கண்காணிப்புப் பொறியாளர் (SE), CUBE-IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு 08.01.2020 அன்று இடிக்கப் பரிந்துரைத்தது.
- குடியிருப்புகளைக் காலி செய்யுமாறு குடியிருப்புதாரர்களுக்கு 19.01.2022 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு (Allotment), 01.06.2022 அன்று ரத்து செய்யப்பட்டது.
- குடியிருப்புதாரர்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்க 25.04.2024 அன்று மாண்பமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பின்னர் தாக்கல் செய்யப்பட்ட 7 ரிட் மனுக்களில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து 25 பேர் மேல்முறையீடு செய்த நிலையில், 45 நாட்களுக்குள் குடியிருப்புகளைக் காலி செய்ய 31.08.2026 அன்று மாண்பமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
- குடியிருப்புதாரர்கள் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவை (SLP), 15.10.2026 அன்று மாண்பமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை மற்றும் மாண்பமை நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், பழுதடைந்த குடியிருப்புகளை இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (02.11.2026) கோரியுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்!. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.









