வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள முரசு தீவிர புயல், ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கரையை அதிகாலை 1 மணியளவில் கரையை கடக்க தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 3) அதிகாலை 1.09 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், தெற்கு ஆந்திரக் கடற்கரையை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ தீவிர புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
நேற்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி நிலவரப்படி, 15.1 டிகிரி வடக்கு அட்சரேகை, 80.4 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் புயல் மையம் கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் காவலிக்கு கிழக்கு – வடகிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு வடக்கு – வடகிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு – தென்மேற்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.
புயலின் வடக்குப் பகுதியில் உள்ள வெளிப்புற சுழல் மேகக் கூட்டங்கள் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிக்குள் நுழைந்துள்ளன. புயலின் முன்பகுதியில் உள்ள அடர்த்தியான மேகக் கூட்டங்களும் கடற்கரையை நெருங்கி வருகின்றன.
முரசு புயல் தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நெல்லூருக்கும் நரசாபூருக்கும் இடையே ஓங்கோலுக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை 4 மணிக்குள் தீவிர புயலாக தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முரசு புயலின் நகர்வை சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து அதிகாலை 1.34 மணிக்கு, ”ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதியில் அதிகாலை 1 மணிக்கு முரசு புயல் கரையை கடக்க தொடங்கியது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.









