ஒழுங்காக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு திமுக மற்றும் அதிமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அயன் ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “இன்றைய சிறுவர்கள் முடி வெட்டுவதைப் பார்த்தால் எனக்கு கஷ்டமாக உள்ளது. குழந்தைகள் பள்ளிக்குப் போவது போன்று முடியை வெட்டுவது கிடையாது; சிலர் ரௌடிகளைப் போல வெட்டுகிறார்கள். மாணவர்கள் முடி வெட்டுவதை ஒழுங்கு செய்ய வேண்டும். சரியாக முடி வெட்டும் குழந்தைகளை மட்டும் பள்ளிக்குள் அனுமதியுங்கள். சரியாக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள், அதில் தவறே கிடையாது. நம் வீட்டுப் பிள்ளையாக நினைத்துதான் இதைச் சொல்கிறேன். முதல் தவறே அங்கிருந்துதான் தொடங்குகிறது.”
“இரண்டாவதாக, கணுக்காலுக்கு மேல் பேண்ட் போடுகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கி மாணவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றால், அங்கே மாணவனின் தோற்றத்தைப் பார்த்தவுடனேயே அவரைத் தவறு செய்தவர் என்று காவல்துறையினர் முடிவு செய்துவிடுகிறார்கள். இதில் காவலர்களின் தவறு எதுவும் இல்லை; மாணவர்களின் தோற்றம்தான் அவர்களை அப்படி எண்ண வைக்கிறது. ஒருவரின் தோற்றம்தான் அவர்களின் குணத்தைக் காண்பிக்கிறது. மாணவர் தவறு செய்தாரா இல்லையா என்பதெல்லாம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். ஆனால், பார்த்தவுடனேயே அவரின் தோற்றத்தால் தவறான எண்ணம் உருவாகிறது” என்றார். அமைச்சரின் பேச்சுக்கு திமுக மற்றும் அதிமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
அமைச்சரின் பேச்சு குறித்து திமுக ஐடி விங் தனது எக்ஸ் பதிவில், “கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது போன்ற படத்தை பச்சைக் குத்திக்கொண்டு பெருமையாக ஊர் சுற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது?
மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில், அவர்களின் பிஞ்சு மனதையும் தோற்றத்தையும் சிதைக்கச் சொல்ல உங்களுக்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது?
ஊருக்கு உபதேசம் செய்யும் முன், உங்கள் கையில் உள்ள டாட்டூவை அழித்துவிட்டு வாருங்கள் அமைச்சரே!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பதிவில், “மாணவர்கள் சீராக முடி வெட்டவில்லை என்றால், அவர்களுக்கு “மொட்டை அடியுங்கள்” என்று கூறுவதற்கு சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு அதிகாரம் வழங்கியது யார்?
சொந்தக் கட்சி நிர்வாகிகளையே தொலைபேசியில் மிரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது மாணவர்களிடமும் இத்தகைய மிரட்டல் தொனியில் பேசத் தொடங்கிவிட்டாரா?
மாணவர்களின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் வகையில் பேசுவதற்கு ஓர் அமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
மாணவர்களை அச்சுறுத்துவது அமைச்சரின் பொறுப்பல்ல; அவர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதே அமைச்சர்களின் கடமை!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி எக்ஸ் பதிவில், “மாணவர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர் அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, அவர்களின் பேச்சு மாணவர்கள் மீதான தாயுள்ளத்தையும், அவர்களின் ஒழுக்கமான வளர்ச்சிக்கான உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இதனை உள்நோக்கத்துடன் அணுகாமல், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.









