தீபாவளிக்கு எல்லோருக்கும் ரூ.8,000 தர்றாங்களா? PIB சொல்வது இதுதான்!

By Minnambalam Desk

|

Published on 3 Nov 2026, 12:00 PM

“தீபாவளிக்கு மத்திய அரசு ஒவ்வொருவருக்கும் ரூ.8,000 தருகிறது, கீழே இருக்கும் லிங்கைக் கிளிக் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்று உங்கள் வாட்ஸ் அப்புக்கும் ஒரு மெசேஜ் வந்திருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைப் போட்டுப் பரவும் இந்த மெசேஜை நம்பிப் பலரும் லிங்கைத் திறந்து பார்க்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்கப் போலி என்று மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB) தெளிவாகச் சொல்லிவிட்டது.

இந்தத் திட்டம் இருக்கிறதா?

ADVERTISEMENT

இல்லை. தீபாவளிக்கு ரூ.8,000 வழங்குவதாகச் சொல்லும் வாட்ஸ்அப் செய்தி போலியானது என்று PIB Fact Check உறுதிசெய்துள்ளது. இப்படி ஒரு நிதியுதவித் திட்டத்தை அரசு எங்கும் அறிவிக்கவில்லை. பிரதமர் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதுதான் இந்த மெசேஜின் நோக்கம்.

லிங்கைத் தொட்டால் என்ன ஆகும்?

ADVERTISEMENT

அந்த லிங்கைத் திறந்தால் ஒரு போலி இணையதளத்துக்குப் போய்ச் சேருவீர்கள். அங்கே ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரம் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம். அத்தோடு, UPI மூலம் பணத்தை உருவுவது, உங்கள் மொபைலில் ஆபத்தான செயலிகளை இறக்கிவிடுவது போன்றவற்றையும் மோசடிக்காரர்கள் முயற்சி செய்யக்கூடும். கணக்கில் இருக்கும் பணமே காலியாகும் ஆபத்தும் இருக்கிறது.

இதையெல்லாம் செய்யாதீர்கள்

ADVERTISEMENT
  • தெரியாத லிங்குகளைத் திறக்காதீர்கள்.
  • OTP, UPI PIN, வங்கிக் கடவுச்சொல், கார்டு விவரங்களை யாரிடமும் சொல்லாதீர்கள்.
  • அரசு நிதி கிடைக்கும் என்று சொல்லிக் கட்டணம் கேட்டால் செலுத்தாதீர்கள்.
  • சந்தேகமான மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வர்டு பண்ணாதீர்கள்.

பணம் போய்விட்டால்?

உடனே உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள். தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930-க்கு அழைக்கலாம். cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் செய்யலாம்.

அரசு பெயரில் வரும் சந்தேகமான செய்திகளை PIB Fact Check-க்கு வாட்ஸ்அப் எண் 8799711259-க்கோ factcheck@pib.gov.in மின்னஞ்சலுக்கோ அனுப்பிச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel