செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் நேஷனல் பெர்மிட் லாரிகளை ஓட்டும் 13 பேரிடம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி காலையில் திடீரெனக் காணாமல் போனார். இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி தொடர்ந்து 13-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி காணாமல் போன விவகாரம் தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக, சிறுமியின் குடும்பத்தினரிடமும் பல கட்டங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. எனினும், இவ்வழக்கில் இதுவரை எவ்விதக் குறிப்பான ஆதாரமும் காவல்துறையினருக்குச் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை உள்ளூர் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் காட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆலம்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான நடுப்பட்டு, ரெட்டிபாளையம், சிக்காமேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 13 நேஷனல் பெர்மிட் (National Permit) லாரி ஓட்டுநர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டதா என்ற பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கியமாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த ஆடு மேய்க்கும் இளைஞர் அரவிந்த் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று அரவிந்த் என்ற இளைஞரை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி காணாமல் போய் 23 நாட்கள் கடந்தும், வழக்கில் இதுவரை எந்தவித முக்கிய முன்னேற்றமும் ஏற்படாததால் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.









