காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் முதல்வர் விஜய் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 245 கடை மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,729 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதன்படி, மதுபாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த ரூ.10 தொகையை மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே (MRP) சேர்த்து, நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, இதுவரை ரூ.140 விலையுள்ள மதுபாட்டிலை வாங்கும்போது காலி பாட்டிலுக்கான ரூ.10 சேர்த்து ரூ.150 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது அந்த ரூ.10 தொகையும் மதுபாட்டிலின் விலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளதால், ரூ.140 மதுபாட்டிலின் புதிய MRP ரூ.150 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் ரூ.150-க்கு மேல் காலி பாட்டிலுக்காகத் தனியாக ரூ.10 வசூலிக்கக் கூடாது. அதேநேரத்தில் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்தால் வாடிக்கையாளருக்கு ரூ.10 திருப்பி வழங்கப்படும். இந்தப் புதிய நடைமுறை ஏற்கெனவே காலி பாட்டில் திட்டம் செயல்படுத்தப்படாத சென்னை உள்ளிட்ட 8 டாஸ்மாக் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலி பாட்டில்களை வாங்கி வைக்க கடைகளில் போதுமான இடம் இல்லை; பாட்டில்களைச் சரிபார்க்க ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை; காலி பாட்டில்களை எண்ணி, பாதுகாத்து, ஒப்படைக்கும் பணிகளால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்பது ஊழியர்களின் தரப்பு கருத்து.

இதனால் கடந்த நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் 460 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் ‘குடிமகன்கள்’ திறந்திருந்த மதுபான கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலை மோதியது. இக்கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்தும் நிலைமை உருவானது.
டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. போராட்டம் தொடர்ந்தாலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தற்காலிகப் பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நவம்பர் 2-ந் தேதி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாவட்டவாரிப் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்தியதற்காக நவம்பர் 1-ந் தேதி 931 கடை மேற்பார்வையாளர்களுக்கும், நவம்பர் 2-ந் தேதி 798 மேற்பார்வையாளர்களுக்கும் என மொத்தம் 1,729 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல நவம்பர் 1-ந் தேதி 4 பேரும், நவம்பர் 2-ந் தேதி 241 பேரும் என மொத்தம் 245 கடை மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 169 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை மத்திய பகுதியில் 50 பேர், சென்னை வடக்கில் 58 பேர், திருவள்ளூர் கிழக்கில் 61 பேர் அடங்குவர்.
சேலம் மண்டலத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 75 பேரும், மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கைச் சேர்ந்த ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருச்சி மண்டலங்களில் யாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களில் மதுரை மண்டலத்தில் 475 பேர், சேலம் மண்டலத்தில் 459 பேர், திருச்சி மண்டலத்தில் 418 பேர், சென்னை மண்டலத்தில் 341 பேர், கோவை மண்டலத்தில் 36 பேர் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக திருநெல்வேலியில் 247 பேர், திருச்சியில் 185 பேர், திருவள்ளூர் கிழக்கில் 179 பேர், புதுக்கோட்டையில் 175 பேர், சேலத்தில் 155 பேர், நாமக்கல்லில் 153 பேர் என அதிக எண்ணிக்கையிலான மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, நவம்பர் 2-ந் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், கடைகளைத் திறக்காவிட்டால் மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். முதல்வர் விஜய் அரசின் இந்த நடவடிக்கையால் டாஸ்மாக் ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.








