மீண்டும் விசாரணை வளையத்தில் சி.விஜயபாஸ்கர் : அமலாக்கத் துறை சம்மன்!

By Kavi

|

Published on 3 Nov 2026, 11:55 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 

ADVERTISEMENT

இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

இந்த விசாரணையில் விஜயபாஸ்கரும் அவரது மனைவியை ரம்யாவும் வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த அடிப்படையில் அமலாக்க துறையும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியது. 

இதன் ஒரு பகுதியாக கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பல்லூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

விஜயபாஸ்கருக்கும் அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இருவரிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

இருவரில் ஒருவர் இந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் மற்றொருவர் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel