முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் தள்ளிப்போனது.
இதற்கிடையே நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பிடித்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், கடந்த 23-ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜனநாயகன்’ திரைக்கு வந்தது. அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளி வந்த வண்ணம் இருந்தாலும் விஜய்யின் கடைசி படம் என்பதால் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் தயாரானதாகச் சொல்லப்படும் இந்தப் படம், வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.78 முதல் 80 கோடி வரை வசூல் செய்தது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.41 கோடி வசூலானது.
அதன்பின் வந்த நாட்களில் வசூல் சற்றே குறைந்தாலும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீண்டும் வேகம் எடுத்தது. 4-வது நாளான நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.37.17 கோடி வசூலித்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக நேற்றைய வசூல்:
தமிழ்நாடு: ரூ.22.50 கோடி
கர்நாடகா: ரூ.4.75 கோடி
கேரளா: ரூ.2.85 கோடி
ஆந்திரா – தெலங்கானா: ரூ.2.05 கோடி
இதர மாநிலங்கள்: ரூ.5.02 கோடி
இதன் மூலம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான முதல் வார முடிவிலேயே உலகளவில் ரூ.217.48 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் இந்திய வசூல் மட்டும் ரூ.145.98 கோடி, வெளிநாடுகளில் கிடைத்த வசூல் ரூ.71.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இணையதளத்தில் படம் வெளியானது. படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது படத்தின் வசூலை பாதித்துள்ளதாகவும் இல்லையென்றால் 250 கோடி வசூலை கடந்திருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
