நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ம். ம்… கேட்டாலும் வருமா
கேட்காத வரமா?
இது போதுமா இதில் அவசரமா?
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா?
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா?
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி!
அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக அறிமுகமான 3 படத்தில் இடம் பெற்றது இந்த பாடல் வரிகள்..
இப்போது இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) – சன் குழும தலைவர் கலாநிதி மாறன்- காவேரி தம்பதியினரின் ஒரே மகளான காவ்யா மாறன் (Kavya Maran) காதல் திருமணம் நவம்பர் 9-ந் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர். தமது துள்ளலான இசை, நவீன தொழில்நுட்பக் கலவையால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் உறவினர். அனிருத்தின் தந்தை நடிகர் ராகவேந்திரா. தாயார் பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி ரவிச்சந்தர். அனிருத்தின் தந்தை வழியிலான அத்தைதான் லதா ரஜினிகாந்த். அனிருத்துக்கு வைஷ்ணவி என்ற மூத்த சகோதரி இருக்கிறார்.
2012-ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற ’கொலவெறி’ பாடல் உலகப் புகழ் பெற்றது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து பிளாக் பஸ்டர் ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறவர் அனிருத்.

’ராக் ஸ்டார்’ என அழைக்கப்படும் அனிருத் ரவிச்சந்திரனுக்கும் காவ்யா மாறனுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக அனிருத்- காவ்யா மாறன் காதல் பேசுபொருளாக இருந்தது.


சன் குழுமம், தென்னிந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனம். இக்குழுமத்தின் ஒரு அங்கம் சன் பிக்சர்ஸ். சன் குழுமத்தின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ30,000 கோடி. சன் குழுமத்தின் சில பிரிவுகளில் நிர்வாக இயக்குநராக (Executive Director) பொறுப்பு வகிக்கிறார் காவ்யா மாறன்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் காவ்யா மாறன் செயல்படுகிறார்.

சன் குழும முதலீட்டின் கீழ் வெளிநாடுகளில் செயல்படும் டி20 லீக் கிரிக்கெட் அணிகளான ‘சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்’ (SA20) போன்ற அணிகளின் நிர்வாகப் பொறுப்புகளிலும் பங்காற்றி வருகிறார் காவ்யா மாறன். இந்திய இளம் தொழில் முனைவோர்களில் முக்கியமானவராக திகழ்பவர் காவ்யா மாறன்.


அனிருத்- காவ்யா மாறன் காதலை இரு குடும்பத்தினரும் ஏற்றுள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோ நகரில் நவம்பர் 9-ந் தேதி திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கலாநிதி மாறனின் குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர். பார்சிலோனா திருமணத்தில் 100 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
