முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்பட ம் ஓடிக் கொண்டிருந்த போது சென்னை திரையரங்கு ஒன்றில் ஸ்கிரீன் மீது விஜய் ரசிகர்கள் தயிர் பாக்கெட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஜூலை 23-ந் தேதி வெளியானது. தமிழ்நாடு முழுவதும் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் ‘ஜனநாயகன்’ படம் பார்க்க சென்றதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கின.

சென்னை வித்யா திரையரங்கிலும் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த சிலர் திடீரென ஸ்கிரீன் மீது தயிர் பாக்கெட்டுகளை வீசினர். இதனால் ஸ்கிரீன் சேதமடைந்தது.
இது தொடர்பாக வித்யா திரையரங்கம் (தாம்பரம் மேற்கு) தமது எக்ஸ் பக்கத்தில், “ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கவும் ஈர்க்கவும் சிறப்பான ஏற்பாடுகளையே நாங்கள் செய்து தருகிறோம். ஆனால் சமூக விரோதிகள் எங்கள் ஸ்கிரீன் மீது தயிர் பாக்கெட்டை வீசினர். இந்த ஸ்கிரீனை மாற்ற பல லட்சம் செலவாகும். இதனால் இனி எங்கள் திரையரங்கில் எந்தவித கொண்டாட்டங்களுக்கும் அனுமதி தர மாட்டோம். இது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
