ரூ.46 கோடி மோசடி முயற்சி.. நடிகை அம்பிகா மீது நடிகை ராதா கண்ணீர் மல்க கொடுத்த புகார் என்ன?

Published On:

| By Mathi

Ambika-Radha-Police (1)

நடிகைகள் அம்பிகா – ராதா இடையேயான குடும்பப் பிரச்சினை தற்போது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. ”தனது 5 காசோலைகளை எடுத்துச் சென்று, அதில் மொத்தம் ரூ.46 கோடிக்குத் தொகையை நிரப்பி, அம்பிகாவின் பெயரில் வங்கியில் செலுத்த முயற்சி செய்யப்பட்டதாக” சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நடிகை ராதா கண்ணீர் மல்க கூறியதாவது: என்னுடைய பெயரில் இருந்த 5 காசோலைகளை எடுத்துச் சென்று, அதில் மொத்தம் ரூ.46 கோடிக்குத் தொகையை நிரப்பி, அம்பிகா அக்காவின் பெயரில் வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள். இதில் எனது தம்பி மல்லிகார்ஜுன் மீதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறேன்.

ADVERTISEMENT

வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில்தான் நான் தங்கியிருந்தேன். அக்காவை நம்பாமல் வேறு யாரை நம்புவது? நான் அங்கு வைத்துவிட்டுச் சென்ற பொருட்களில் இருந்து இந்தக் காசோலைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த வீட்டிற்குள் என்னை அனுமதிக்கவில்லை. எங்களுக்குள் சொத்துப் பாகப்பிரிவினை ஏற்கெனவே முடிந்துவிட்டது. ARS கார்டனில் அக்காவுக்கு ஒரு பெரிய கட்டிடம் கொடுக்கப்பட்டது. எனக்கு இந்தப் பகுதி 2006-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அதை நான் மேம்படுத்தி வருகிறேன்.

ADVERTISEMENT

என்னுடைய RR Gardens வங்கிக் கணக்குடன் தொடர்புடைய காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது எனக்கு SMS Alert வந்தது. செப்டம்பர் 16-ஆம் தேதி அந்த அலர்ட் வந்தது. அதில் இருந்த தொகையைப் பார்த்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவுக்கெல்லாம் நான் சம்பாதிக்கும் ஆள் கூட கிடையாது.

உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு அந்தக் காசோலைகளுக்கு Stop Payment கொடுத்துவிட்டேன். அதனால் பணம் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகும் செப்டம்பர் 18-ஆம் தேதி இரண்டாவது முறையாக மீண்டும் காசோலையை வங்கியில் செலுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

எனவே இதற்குப் பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது என்பது தெரிய வேண்டும். காசோலைகள் அம்பிகா அக்காவின் பெயரில் செலுத்தப்பட்டுள்ளதால் புகாரில் அவரது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதேபோல் எனக்கு சந்தேகம் உள்ள மற்றொருவர் எனது தம்பி மல்லிகார்ஜுன்.

காசோலைகளை யார் எடுத்தார்கள்? யார் அதில் தொகையை நிரப்பினார்கள்? யார் வங்கியில் செலுத்தினார்கள்? என்பதையெல்லாம் போலீசார் விசாரித்து கண்டுபிடிப்பார்கள். ரூ.46 கோடி பணம் எடுக்கப்படவில்லை. நான் உடனடியாக Stop Payment கொடுத்ததால் பணப் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது. இவ்வாறு நடிகை ராதா கண்ணீருடன் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share