பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் இப்படி புலம்புகிறீர்களோ? என்று அமைச்சர் ராஜ்மோகனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் .
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா (நவம்பர் 1) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், “இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறினார். இந்த விஷயம் எனக்கும் லயோலா மணிக்கும் தான் தெரியும்
ஆனால் 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் காசு வாங்கி கொண்டு பதவி வழங்க மாட்டேன், அந்த பதவி உரிய நபருக்கு தான் வழங்கப்படும் என்று கூறிவிட்டேன். நாங்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சமாக வாங்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.
லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்ற வகையில் அமைச்சருக்கு யார் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்தது என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஊழல் தடுப்பு சட்ட நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைச்சர் ராஜ்மோகன் பேசியது தொடர்பாக இன்று (நவம்பர் 3) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மொட்டை கடுதாசி போல் மேடையில் பேசுவது அழகல்ல என்று தெரிவித்துள்ள அவர், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதிலோ
தமிழக வெற்றி கழக அரசுக்கு என்ன சிக்கல்? லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை பதிவு செய்ய உங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணிற்கு, நீங்களே ‘anonymous’ ஆக புகார் அளித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்? அதுமட்டுமன்றி, உங்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருக்கும் லயோலா மணியை எதற்காக அணுகுகிறார்கள்? அவரைப் பிடித்தால் தான் உங்களை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா?
அல்லது அவர் மூலமாகத் தான் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா? ‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வரே பொது மேடையில் கூறிய பிறகும் கூட, கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம்?
ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ? பதில் சொல்லுங்கள் அமைச்சரே…” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.









