திமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக வேண்டும்- திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு

By Mathi

|

Published on 3 Nov 2026, 4:26 PM

Duraimurugan-DMk-Thirunavukkarasu

புரோகிதர்கள் மந்திரம் ஓதி பெயர்த்தியின் திருமணத்தை நடத்தியதற்காக திமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக வேண்டும் என்று திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு வலியுறுத்தி உள்ளார்.

துரைமுருகன் இல்ல திருமணத்தை பார்ப்பனர்கள், சமஸ்கிருத வேத மந்திரம் முழங்கி நடத்தி வைத்ததற்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க நிர்வாகி பொழிலன் உள்ளிட்ட பலரும் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த நவம்பர் 1ஆம் தேதி துரைமுருகன் பெயர்த்திக்குத் திருமணம் நடைபெற்று இருக்கிறது. துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச் செயலாளர். பெயர்த்தியோ துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் மகள். கதிர் ஆனந்த் தி.மு.க. எம்.பி.

தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வீட்டு திருமணம் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்று இருக்க வேண்டும். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்ததாக செய்திகள் வந்தன. இது ஏதோ ஒப்புக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், புரோகிதர்கள் மந்திரம் ஓதி இருக்கிறார்கள். சடங்குகள் வேறு நடைபெற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தாலியும் அப்போது கட்டப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்து, மணமகன் அணிவித்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இவர், தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் தொடரலாமா?

ADVERTISEMENT

தந்தையும் மகனும் திருமண வீட்டுக்காரர்கள். தி.மு.க.காரர்கள். பெரும் பொறுப்பில் இருப்பவர்கள். இந்த இலட்சணத்தில் துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச் செயலாளர். அப்பொறுப்பு அறிஞர் அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியோர் வகித்த பொறுப்பு. அங்கே மனிதக் குரங்கை குந்த வைத்து போல ஆகிவிட்டது. தி.மு.க.வின் தலைவர்களில் ஒருவராக இருந்து கொண்டு, துரைமுருகன் கட்சி மற்றும் இயக்க நிகழ்வுகளுக்கு மாறாக அவர் வீட்டுத் திருமணத்தை நடத்தி இருக்கிறார். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர் எதிராக நடந்து கொண்டிருக்கிறார்.

1940களில் சர் ஏ.இராமசாமி முதலியார் தம் வீட்டுத் திருமணம் ஒன்றை இப்படி நடத்தியதற்கு அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏட்டில் கண்டனம் தெரிவித்து எழுதினார். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர் இப்படி நடக்கலாமா? என்று கேட்டார். அதைத்தான் நானும் துரைமுருகனைக் கேட்கிறேன். எனவே அவர் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, கட்சியையும் இயக்கத்தையும் அவர் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel