தமிழகத்தில் இன்று (நவம்பர் 3) 60 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதன்படி, மதுபாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் ரூ. 10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ரூ. 10 தொகையை மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே (MRP) சேர்த்து, நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, இதுவரை ரூ. 140 விலையுள்ள மதுபாட்டிலை வாங்கும்போது, காலி பாட்டிலுக்கான ரூ. 10-ஐச் சேர்த்து ரூ. 150 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது அந்த ரூ. 10 தொகையும் மதுபாட்டிலின் விலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளதால், ரூ. 140 மதுபாட்டிலின் புதிய MRP ரூ. 150 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகக் கூறி, டாஸ்மாக் ஊழியர்கள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்தியதற்காக நவம்பர் 1-ஆம் தேதி 931 கடை மேற்பார்வையாளர்களுக்கும், நவம்பர் 2-ஆம் தேதி 798 மேற்பார்வையாளர்களுக்கும் என மொத்தம் 1,729 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 1-ந் தேதி 4 பேர், நவம்பர் 2-ந் தேதி 241 பேர் என மொத்தம் 245 கடை மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 4,051 டாஸ்மாக் கடைகளில் 3,991 கடைகள் திறக்கப்பட்டுள்ளன; வெறும் 60 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் 98.52% கடைகள் திறந்துள்ள நிலையில், வெறும் 1.48% கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 75 கடைகளில் 66 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 4 கடைகளும்; நாகர்கோவில், காஞ்சிபுரம் (தெற்கு), ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 3 முதல் 5 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் ஒரே ஒரு கடை மட்டுமே மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.









