செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய பேச்சு இல்லாத இடமே இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ கட்டமைப்புகளுக்காகப் பல லட்சம் கோடி ரூபாயைக் கொட்டுகின்றன. இதைப் பார்த்து, “நாமும் ஏஐ பங்குகளில் போட்டு வைக்கலாமா?” என்ற ஆசை சிறு முதலீட்டாளர்களுக்கும் வந்துவிட்டது.
ஆனால், இந்த வேகத்தைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டுப் பங்குகளை வாங்குவது சரிதானா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் Value Research நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீரேந்திர குமார்.
மைக்ரோசாப்ட் கணக்கு என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஏஐ கட்டமைப்புகளை உருவாக்க சுமார் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் கோடி) முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதனால் ஏஐ நிறுவனங்களின் வேலைவாய்ப்பு, வருவாய் ஆகியவற்றை எப்படி மாற்றப்போகிறது என்ற விவாதமும் சூடு பிடித்திருக்கிறது.
2000-ம் ஆண்டு டாட்காம் சரிவு சொல்லும் பாடம்
1990-களின் கடைசியில் இணையப் புரட்சி தொடங்கியபோது, Global Crossing என்ற நிறுவனம் கடலுக்கு அடியில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் போட 10 பில்லியன் டாலருக்கும் மேல் செலவழித்தது. 2000-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
ஆனால், எதிர்பார்த்த வருவாய் உரிய நேரத்தில் வராததால், 2002-ல் அந்த நிறுவனம் திவாலானது. அது போட்ட கேபிள்களை வேறு நிறுவனங்கள் பிறகு வாங்கிப் பயன்படுத்தின. தொழில்நுட்பம் உண்மையாக இருந்தாலும், அதில் முதலில் காசு போட்டவர்களுக்கே லாபம் போய்ச் சேரும் என்பது கட்டாயம் இல்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
ஏஐ பங்குகளில் போடலாமா?
ஏஐ எதிர்காலத்தில் முக்கிய இடம் பிடிக்கலாம். ஆனால், இப்போது அதில் பணம் கொட்டும் நிறுவனங்களுக்கே அதன் முழுப் பலனும் கிடைக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்க முயற்சி செய்யாதீர்கள் என்பதே தீரேந்திர குமாரின் வலியுறுத்தல்.
சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
- செய்திகளைப் பார்த்து, நமக்குப் புரியாத நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள்.
- நமக்குப் புரிந்த தொழில்களிலும், நீண்ட காலத்துக்கு நம்பிக்கை வைக்கக்கூடிய நிறுவனங்களிலும் முதலீடு செய்யுங்கள்.
- குறைந்த செலவில் பரவலாகப் பிரித்து முதலீடு செய்வது, தொடர்ந்து சேமிப்பது, பொறுமையாக இருப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
- ஏஐயை முதலீட்டுப் பொருளாகப் பார்ப்பதைவிட, சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும் கருவியாகப் பயன்படுத்துங்கள். இதுதான் அவரது முக்கிய அறிவுரை.
குறிப்பு: இது பொதுவான கருத்து. முதலீடு செய்யும் முன் உங்கள் வருமானம், தேவை, ரிஸ்க் தாங்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கிட்டு முடிவெடுப்பது அவசியம்.









