நடுராத்திரியில் கெண்டைக்காலில் திடீர் இழுப்பு… தூக்கமே போயிடுதா?

By Minnambalam Desk

|

Published on 3 Nov 2026, 8:58 PM

நல்ல தூக்கத்தில் இருக்கும்போது திடீரென்று கெண்டைக்கால் தசை கல் மாதிரி இறுகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். சில நிமிடங்கள்தான் நீடிக்கும்,

ஆனால் அதன் பிறகு தூக்கம் வராமல் தவிப்போம். இதை மருத்துவத்தில் நாக்டர்னல் லெக் கிராம்ப்ஸ் (Nocturnal Leg Cramps) என்பார்கள். வயதானவர்களுக்கு மட்டும் இல்லை, இளைஞர்களுக்கும் வரும். இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.

ADVERTISEMENT

இரவில் தசை இழுக்க என்னென்ன காரணம்?

  • உடம்பில் தண்ணீர்ச்சத்து குறைவது.
  • நீண்ட நேரம் நடப்பது அல்லது நிற்பது.
  • கடுமையான உடற்பயிற்சி.
  • 50 வயதைக் கடந்த பிறகு தசைகளின் திறன் குறைவது.
  • பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்களின் அளவில் சமநிலை தவறுவது.
  • கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
  • நீரிழிவால் வரும் நரம்புப் பிரச்சினைகள், சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள்.
  • சில மருந்துகளின் பக்கவிளைவுகள்.

வலி வந்துவிட்டால் உடனே என்ன செய்வது?

ADVERTISEMENT

பதறாமல், பாதிக்கப்பட்ட காலை மெதுவாக நீட்டுங்கள். பாதத்தின் விரல்களை உங்கள் உடம்பின் பக்கம் மேல்நோக்கி இழுத்தால் தசையின் இறுக்கம் குறையும்.

கூடவே, காலை மெதுவாக மசாஜ் செய்வது, எழுந்து கொஞ்ச தூரம் நடப்பது, வெதுவெதுப்பான தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றையும் செய்யலாம்.

ADVERTISEMENT

வராமல் தடுக்க என்ன வழி?

  • பகல் முழுக்கப் போதுமான தண்ணீர் குடியுங்கள்.
  • தூங்கப் போகும் முன் கால் தசைகளை மெதுவாக நீட்டும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
  • நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காதீர்கள்.
  • உடல் உழைப்புக்குப் பிறகு தசைகளுக்கு ஓய்வு கொடுங்கள்.
  • கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

எப்போது டாக்டரைப் பார்க்க வேண்டும்?

அடிக்கடி இழுப்பு வருவது, வலியால் தூக்கம் கெடுவது, கால்களில் வீக்கம், மரத்துப்போவது, பலவீனம் ஆகியவை இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள். குறிப்பாக, ஒரே காலில் திடீரென வீக்கம், சிவப்பு, சூடு, வலி எல்லாம் சேர்ந்து வந்தால் உடனே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்ய வேண்டும்.

இழுப்பு தொடர்ந்து வந்தால், ரத்தச் சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாடு, தாதுக்களின் அளவு ஆகியவற்றை மருத்துவர் பரிசோதிக்கச் சொல்லலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கால்சியம், மெக்னீசியம் மாத்திரைகளைச் சொந்த முடிவில் எடுக்காதீர்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel