போராட்டம் நடத்த அரசியல் சாசனப்படி உரிமை உண்டு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

By Mathi

|

Published on 3 Nov 2026, 7:09 PM

Delhi Protest- Supreme Court

போராட்டம் நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை என்றும், ஒரு தரப்பினர் போராட்ட இடத்தை நிரந்தரமாக ஆக்கிரமித்துக் கொண்டு மற்றவர்களின் போராட்ட உரிமையை மறுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி ரத்து, போராட்டங்களால் வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (நவம்பர் 3) விசாரித்தது.

இறையாண்மையின் அடையாளம் நாடாளுமன்றம்

மத்திய அரசு மற்றும் டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாடாளுமன்றம் என்பது வெறும் அரசியல் கட்டிடம் அல்ல. அது இந்தியாவின் இறையாண்மையின் அடையாளம். அனுமதியின்றி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முடியாது. அதேபோல உச்சநீதிமன்றத்துக்கு முன்பாகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முடியாது. டெல்லியில் ஜூலை 20-ந் தேதி Cockroach Janata Party (CJP) தலைமையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்துக்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து 17 நாட்கள் ஜந்தர் மந்தரில் இருந்தனர்” என்றார்.

ADVERTISEMENT

போராட்டம் நடத்த உரிமை உண்டு

அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. ஒரு போராட்ட இடத்தை ஒரு தரப்பினர் மட்டுமே காலவரையின்றி ஆக்கிரமித்துக் கொண்டிருக்க முடியாது. விவசாயிகள் எங்கே போவார்கள்? தொழிலாளர்கள் எங்கே போவார்கள்? தொழிற்சங்கங்கள் எங்கே போவார்கள்? மற்றவர்களும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்துவதற்கு ஏன் கூடுதல் அவகாசம் வழங்கப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். அதே இடத்தில் போராட்டம் நடத்த வேறொரு அமைப்பு அனுமதி கேட்டிருக்கலாம். போராட்டம் நடத்துவதற்கு ஓரிரு இடங்கள்தான் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. ஏற்கெனவே ஒரு இடத்தில் போராட்டம் நடத்துகிறோம் என்பதற்காக மற்றவர்களை அங்கு அனுமதிக்க முடியாது என்று சொல்ல முடியாது” என்றார்.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் போது போராட்டத்துக்கு அனுமதி வழங்கும்போதும் மறுக்கும்போதும் அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்டால் எவ்வளவு காலத்துக்கு என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லியில் நடைபெறும் போராட்டங்களால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வர்த்தகர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைநகர் போராட்டங்களை ஒழுங்குபடுத்துக

அப்போது வியாபாரிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களால் வியாபாரிகளுக்கு ரூ.2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ராம்லீலா மைதானம் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில்தான் உள்ளது. அந்த மைதானத்தைச் சுற்றி ஆசப் அலி சாலை, தர்யாகஞ்ச், துர்க்மான் கேட், கமலா மார்க்கெட், ஜும்மா மசூதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இவற்றைச் சுற்றி சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஏராளமான மொத்த விற்பனைக் கடைகளும் வணிக நிறுவனங்களும் உள்ளன.

போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது

பண்டிகைக் காலங்களில் விற்பனை நடைபெறாவிட்டால் பெரும் இழப்பு ஏற்படும். வியாபாரிகள் மட்டுமல்லாமல் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது ஜந்தர் மந்தர் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. டெல்லி உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். அடுத்த 2 மாதங்களுக்கு டெல்லியில் அனுமதி பெற்ற அல்லது அனுமதி பெறாத எந்த ஒரு போராட்டத்தையுமே நடத்த அனுமதிக்கக் கூடாது” என்றார்.

இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்த வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, “வியாபாரிகளின் கடைகளில் விற்பனை குறைந்ததற்கு போராட்டங்கள் மட்டும்தான் காரணமா? பொருளாதார நிலைமையும் அதற்குக் காரணமாக இருக்கலாம் இல்லையா? சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைக்கின்றனர். அரசாங்கமே சில நேரங்களில் கடைகளை மூடச் சொல்கிறது.. அப்போது ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”போராட்டம் நடத்தியவர்கள்தான் கடைகளை மூடச் செய்தனர். சில நேரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறுகின்றன. இதனால் மற்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களே எங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றத்திலும் வாதிடுகிறார்கள்” என்றார்.

இந்த விவாதத்தில் இணைந்த மூத்த வழக்கறிஞர் என். ஹரிஹரன், “ஜந்தர் மந்தரில் இருந்து போராட்ட இடத்தை மாற்றிவிட்டீர்கள். இப்போது ராம்லீலா மைதானத்திலும் பிரச்சினை என்கிறீர்கள். அப்படியானால் மக்கள் எங்கே போராட்டம் நடத்துவது?” என்று கேள்வி எழுப்பினார்.

அரசியல் சாசனம் தந்த போராட்ட உரிமை

அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இங்கு ஒன்றுக்கொன்று முரண்பட்ட, உரிமை தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. போராட்டம் நடத்துவதற்கான உரிமை அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை. அதேபோல வியாபாரம் செய்வதற்கும் தொழில் நடத்துவதற்கும் உரிமை இருக்கிறது. வியாபாரம் என்று கூறும்போது பெரிய வணிக நிறுவனங்களை மட்டும் குறிப்பிடவில்லை. தினக்கூலி வேலை செய்து வாழும் தொழிலாளியின் வாழ்வாதாரத்தையும் குறிப்பிடுகிறோம். அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் அந்தத் தொழிலாளி தனது உணவுக்கு எங்கே செல்வார்?” என்று கேட்டார்.

இதையடுத்து, போராட்டங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக டெல்லி கிரானா கமிட்டி தாக்கல் செய்த மனுவில் மத்திய அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், போராட்டங்களை நடத்திய அமைப்புகளையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டது. அவர்களின் விளக்கத்தைக் கேட்காமல் இந்த வழக்கில் முடிவெடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

போலீசாரின் கண்காணிப்பு டெக்னாலஜி

இதன் பின்னர் போராட்டங்களின்போது போலீசார் பயன்படுத்திய ”கண்காணிப்புத் தொழில்நுட்பம்” தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது.

மென்பொருள் சுதந்திர சட்ட மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “போராட்டக்காரர்களை எந்த வகையான தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கிறார்கள்? எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தக் கண்காணிப்பு நடைபெறுகிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். பொது இடத்தில் போராட்டம் நடத்தினாலும் ஒருவருக்குத் தனி உரிமை இருக்கிறது” என்று வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “போராட்டங்களை 500 முதல் 600 சோசியல் மீடியா பிரபலங்கள் லைவ் ஒளிபரப்பு செய்கின்றனர். ஆனால் அரசின் சிசிடிவி கண்காணிப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என பதிலடி கொடுத்தார்.

அப்போது, “பொது இடத்தில் இருக்கும் ஒருவர் எந்த அளவுக்குத் தனி உரிமையை எதிர்பார்க்க முடியும்” என்ற கேள்வி நீதிமன்றத்தில் எழுந்தது.

அதாவது, ஒருவர் பொது இடத்தில் நிற்பதைக் கேமராவில் பதிவு செய்வதற்கும், அவரது முகத்தை அடையாளம் கண்டு தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் நீதிபதிகள் விவாதித்தனர்.

இத்தகைய கண்காணிப்பில் சேகரிக்கப்படும் தகவல்களை அரசு எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்துகிறது, அவற்றைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் என்ன என்பவை குறித்தும் விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கண்காணிப்பதற்கு எதிராக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (SFLC) தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் பதிலைக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பெண் பத்திரிகையாளர்கள்

டெல்லி போராட்டங்களின்போது பெண் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், போலீசார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

இந்தப் புகார்கள் குறித்து தனியாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தீபாவளிக்குப் பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், போராட்டங்களின்போது வழக்கறிஞர்கள் தடுத்து வைக்கப்பட்டது, நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களின் அறைகளுக்கும் செல்வதில் தடைகள் ஏற்பட்டது, இணைய சேவை துண்டிக்கப்பட்டது, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது, பத்திரிகையாளர்களின் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது உள்ளிட்ட புகார்களும் விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், மேனகா குருசுவாமி, அருந்ததி கட்ஜு, சி.யு. சிங், பி.வி. தினேஷ் உள்ளிட்டோர் பல்வேறு மனுதாரர்கள் சார்பில் ஆஜராகினர்.

போராட்டங்களில் வெளிநாட்டினர் பங்கேற்பதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆஜரானார்.

9 பிரிவுகளாக விசாரணை

டெல்லி போராட்டங்கள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை 9 பிரிவுகளாகப் பிரித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் எந்த வழக்கறிஞர் முதலில் வாதிடுவது, வாதங்களை முன்வைக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிரச்சினைகளையே மீண்டும் எழுப்பும் புதிய மனுக்களைத் தவிர்க்கவும், முற்றிலும் புதிய பிரச்சினையை எழுப்பும் மனுக்களை மட்டும் தனியாகப் பரிசீலிக்கவும் நீதிபதிகள் முடிவு செய்தனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel