டேட்டா சென்டருக்காக ரூ.12,500 கோடி கடன் வேட்டை! சர்வதேச வங்கிகளிடம் பேசும் அதானி குழுமம்!

By Minnambalam Desk

|

Published on 3 Nov 2026, 11:18 PM

செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் சேவைகளுக்கான தேவை இந்தியாவில் ஏறிக்கொண்டே போகிறது. அதைப் பிடித்துக்கொள்ளும் முயற்சியாக, கௌதம் அதானியின் குழுமம் தன்னுடைய டேட்டா சென்டர் விரிவாக்கத்துக்காக சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,500 கோடி) கடன் திரட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எந்த நிறுவனம் கடன் வாங்குகிறது, யாரிடம் பேசுகிறது?

ADVERTISEMENT

அதானி குழுமத்தின் கூட்டு நிறுவனமான அதானிகானெக்ஸ் (AdaniConneX), அமெரிக்க டேட்டா சென்டர் நிறுவனமான எட்ஜ்கனெக்ஸுடன் (EdgeConneX) சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான் கடன் திரட்டத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக DBS Group, First Abu Dhabi Bank, Mitsubishi UFJ Financial Group உள்ளிட்ட சர்வதேச வங்கிகளிடம் பேச்சு நடக்கிறது. அதே நேரத்தில், Natixis, ING Bank, Societe Generale போன்ற வங்கிகளுடனும் நிதி திரட்டுவது பற்றிய ஆலோசனைகள் போய்க்கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

வட்டி எவ்வளவு? எத்தனை வருடம்?

கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட நிபந்தனைகள் இன்னும் இறுதியாகவில்லை. கடனின் காலம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று தகவல்கள் சொல்கின்றன.

ADVERTISEMENT

2035-க்குள் ரூ.8 லட்சம் கோடி!

டேட்டா சென்டர்கள், டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2035-ம் ஆண்டுக்குள் சுமார் 100 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் கோடி) முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

அம்பானியும் களத்தில்

இந்தப் போட்டியில் அதானி மட்டும் இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் அடுத்த 7 ஆண்டுகளில் AI கட்டமைப்பு வசதிகளுக்காக 110 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் டேட்டா சென்டர் திறன் 2026 ஆகஸ்டில் 1.57 ஜிகாவாட்டாக இருந்தது. 2030-க்குள் அது 8 ஜிகாவாட்டைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு வேகமாகச் சந்தை வளர்வதால்தான் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்கின்றன.

ஏற்கெனவே அதானிகானெக்ஸ் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான டேட்டா சென்டர் கடனைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel