ஆர். கோபிநாத், பொருளாதார ஆய்வாளர்
இந்தியாவின் வளர்ச்சி குறித்து இரண்டு கதைகள்
இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சிப் பயணத்தைப் பற்றி இன்று இரண்டு வேறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன.
ஒன்று நம்பிக்கையூட்டுகிறது
மற்றொன்று எச்சரிக்கிறது
உலக வங்கியின் சமீபத்திய வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையின்படி, 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கீழ்-நடுத்தர வருமான நாடுகளுக்கான வறுமைக் கோட்டிற்கு ($4.20/நாள், 2021 PPP) கீழ் வாழ்ந்த மக்களின் விகிதம் 57.7 சதவீதத்திலிருந்து 16.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் சுமார் 49.6 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் தீவிர வறுமை ($3/நாள்) 27.1 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் இதே நேரத்தில், 2026 உலக பட்டினிக் குறியீடு (Global Hunger Index – GHI) இந்தியாவை 122 நாடுகளில் 100வது இடத்தில் வைத்திருக்கிறது. இந்தியாவின் GHI மதிப்பெண் 24.1 ஆக இருந்து “தீவிரமான” (“Serious”) பட்டினி நிலை கொண்ட நாடுகளின் பிரிவில் தொடர்கிறது. மேலும் இந்த அறிக்கையில், இந்தியாவில் 9.8% மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்கின்றனர்; 29.3% குழந்தைகள் சவலைக் குழந்தைகளாய் (stunting) உள்ளனர்; 19% குழந்தைகள் மெலிவால் (wasting) பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.7% ஆக உள்ளது.
இந்த இரண்டு தரவுகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றலாம். ஆனால் அவை உண்மையில் இந்தியாவின் வளர்ச்சியின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.
வறுமையும் பட்டினியும் ஒன்றல்ல

இந்த விவாதத்தின் அடிப்படைப் பிரச்சினை, வறுமை குறைந்துவிட்டால் பட்டினியும் குறைந்துவிட்டதாகக் கருதும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதலாகும்.
உலக வங்கி அளவிடுவது ஒரு குடும்பத்தின் நுகர்வுத் திறனை. அதாவது, அக்குடும்பத்துக்கு குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளை வாங்கும் பொருளாதார வலிமை உள்ளதா என்பதையே அது கணக்கிடுகிறது.
மாறாக, GHI என்பது பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையின் பல்பரிமாணக் குறியீடு. அது மக்கள் போதுமான உணவைப் பெறுகிறார்களா, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்களா, உணவுக் குறைபாடு குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுகிறது.
தேசிய குடும்பநல ஆய்வு (National Family Health Survey -NFHS) இன்னும் நேரடியானது. அது குழந்தைகளின் உயரம், எடை, பெண்களின் இரத்தச் சோகை, ஊட்டச்சத்து நிலை போன்ற உண்மையான மனித வளர்ச்சி விளைவுகளை அளவிடுகிறது.
எனவே, வறுமை குறைதல் மற்றும் பட்டினி குறைதல் ஒன்றல்ல. ஒன்று பொருளாதார அணுகலைப் பற்றி பேசுகிறது; மற்றொன்று மனித உடல்நலம் மற்றும் வாழ்க்கை வாய்ப்புகளைப் பற்றி பேசுகிறது.
வறுமைக் கோட்டைக் கடப்பது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யாது

இந்தியாவின் வளர்ச்சி விவாதத்தில் மிகவும் வலியுறுத்தப்பட வேண்டிய உண்மை இதுதான்.
ஒரு குடும்பம் வறுமைக் கோட்டிற்கு மேல் சென்றிருக்கலாம். ஆனால் அந்தக் குடும்பம் சத்தான உணவைப் பெறுகிறது என்று அர்த்தமில்லை. உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் வயிறு நிரம்ப உண்பதல்ல; புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துகள் அடங்கிய பல்வகை உணவுகளை வழக்கமாகப் பெறும் திறனாகும்.
ஒரு குடும்பம் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசியைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதே குடும்பத்திற்கு தினசரி பால், முட்டை, பருப்பு, காய்கறி மற்றும் பழங்களை வாங்க முடியாமல் இருக்கலாம். அப்படியானால் பொருளாதார ரீதியாக வறுமைக் கோட்டிற்கு மேல் இருந்தாலும், அந்தக் குடும்பம் ஊட்டச்சத்து ரீதியாக பாதிக்கப்பட்டதாகவே இருக்கும்.
இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் வறுமைக் குறைப்பு மற்றும் மனித முன்னேற்றத்தை ஒன்றாகக் கருதுவது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
வருமானம் உயர்ந்தாலும் ஏன் ஊட்டச்சத்து மேம்படவில்லை?

வறுமைக் குறைப்பு மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றம் இடையே உள்ள இடைவெளியைப் புரிந்துகொள்ள, குடும்பங்களின் அன்றாட பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் பருப்பு வகைகள், பால், முட்டை, காய்கறிகள், பழங்கள் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்துள்ளன. இதனுடன் கல்வி, சுகாதாரம், வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளன.
வருமானம் உயர்ந்தாலும், உண்மையான நுகர்வுத் திறன் அதே அளவில் உயர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், இந்தி தொழிலாளர் படையில் பெரும்பான்மையானோர் இன்னும் முறைசாராத் துறைகளில்தான் பணிபுரிகின்றனர். உலக வங்கி அறிக்கையும் வறுமை தற்போது குறைந்த கல்வி, குறைந்த சொத்து, நிலையான வேலைவாய்ப்பின்மை மற்றும் அதிக சார்புநிலை கொண்ட குடும்பங்களில் குவிந்துள்ளது என்று குறிப்பிடுகிறது.
நிலையான வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், வேலை கிடைக்கும் நாட்களில் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. மருத்துவ அவசரநிலை, வேலை இழப்பு அல்லது விலையேற்றம் ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது குடும்பத்தின் உணவுச் செலவுதான்.
அதனால், வறுமைக் கோட்டிற்கு மேல் வந்த பல குடும்பங்களும் இன்னும் சத்தான உணவைப் பெறுவதில் சிரமப்படுகின்றன.
சமத்துவமின்மை: வளர்ச்சியின் மறைக்கப்பட்ட முகம்
இந்தியாவின் வளர்ச்சிக் கதையைப் புரிந்துகொள்ள விரும்பினால், வறுமையை விட சமத்துவமின்மையை அதிகமாகப் பேச வேண்டும்.
உலக வங்கியின் அறிக்கை ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்புகள் பணக்கார குடும்பங்களின் நுகர்வை முழுமையாகப் பதிவு செய்யாமல் இருக்கலாம்; எனவே சமத்துவமின்மை குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று அது கூறுகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டில் மேல்தட்டு 10 சதவீத தொழிலாளர்களின் நடுத்தர வருமானம் அடித்தட்டு 10 சதவீத தொழிலாளர்களின் வருமானத்தை விட சுமார் 13 மடங்கு அதிகமாக இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதன் பொருள், தேசிய சராசரிகள் காட்டும் முன்னேற்றம் அனைவரின் அனுபவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
சாதி, வர்க்கம் மற்றும் பாலினத்தின் தாக்கம்
சமத்துவமின்மை என்பது வருமானப் பிரச்சினை மட்டுமல்ல; அது சமூக கட்டமைப்பின் பிரச்சினையாகவும் உள்ளது.
இந்தியாவில் சாதி, வர்க்கம், பாலினம், நிலவுடைமை மற்றும் தொழில்சந்தை அமைப்பு ஆகியவை உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலை நிர்ணயிக்கின்றன. தலித் சமூகங்கள், பழங்குடியினர், நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் முறைசாராத் தொழிலாளர்கள் பல அடுக்குகளிலான பின்தங்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், கல்வி, சுகாதாரம், நில உரிமை, சமூகப் பாதுகாப்பு மற்றும் அரசின் சேவைகளை அணுகுவதிலும் பின்தங்கியவர்களாக உள்ளனர்.
அதனால்தான் குழந்தை வளர்ச்சிக் குறைவு, குழந்தை மெலிவு மற்றும் பெண்களிடையேயான இரத்தச் சோகை போன்ற பிரச்சினைகள் இந்தக் குழுக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன.
NFHS: எச்சரிக்கை மணி

NFHS-6 (2019–21) தரவுகளின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 29.3% பேர் வளர்ச்சிக் குறைபாட்டால் (stunting), 19% பேர் மெலிவாய் (wasting), உள்ளனர்.
இந்தத் தரவுகள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. பொருளாதார முன்னேற்றம் நிகழ்ந்திருக்கலாம்; ஆனால் அது இன்னும் சமமான மனித முன்னேற்றமாக முழுமையாக மாறவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவின் அடுத்தகட்ட கொள்கை விவாதம் வறுமைக் குறைப்பைத் தாண்டி உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நீதியை நோக்கிச் செல்ல வேண்டும்.
முதலாவதாக, பொது விநியோகத் திட்டத்தை வெறும் அரிசி மற்றும் கோதுமை விநியோகத் திட்டமாகப் பார்க்கக்கூடாது. பருப்பு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் அணுகலையும் உள்ளடக்கிய அமைப்பாக அது விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இரண்டாவதாக, முறைசாராத் தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு, நியாயமான கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வருமானப் பாதுகாப்பு இல்லாமல் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.
மூன்றாவதாக, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை மையப்படுத்திய ஊட்டச்சத்து முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
நான்காவதாக, தேசிய சராசரிகளை மட்டுமே கவனிக்காமல், மாவட்ட மற்றும் சமூக அடிப்படையிலான சமத்துவமின்மைகளை குறைக்கும் இலக்கு நோக்கிய நடவடிக்கைகள் அவசியம்.
இந்தியாவின் வளர்ச்சி- எப்படிப் பார்க்கவேண்டும்?
உலக வங்கியின் வறுமை அறிக்கையும், NFHS மற்றும் உலக பட்டினிக் குறியீட்டின் எச்சரிக்கைகளும் ஒன்றுக்கொன்று எதிரான கதைகள் அல்ல. அவை இந்தியாவின் வளர்ச்சியின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.
ஆனால் அவற்றை ஒன்றாகப் படிக்கும்போது ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது: வறுமை குறைந்திருப்பது மட்டும் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் மனித முன்னேற்றத்தையும் உறுதி செய்யாது.
பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மனித வளர்ச்சியில் காணப்படும் இடைவெளிகள், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சமமாக சென்றடையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, இந்தியாவின் வளர்ச்சிக் கதையை வறுமைக் கோட்டைக் கடந்த மக்களின் எண்ணிக்கையால் மட்டும் கொண்டாட முடியாது. வளர்ச்சியின் உண்மையான அளவுகோல், எத்தனை பேர் வறுமையிலிருந்து மீண்டார்கள் என்பதல்ல; எத்தனை குழந்தைகள் சத்தான உணவுடன் வளர்கிறார்கள், எத்தனை பெண்கள் இரத்தச் சோகையின்றி வாழ்கிறார்கள், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கும் கண்ணியமான வாழ்க்கை வாய்ப்புகள் கிடைக்கின்றனவா என்பதுதான். அந்தக் கேள்விகளுக்கான பதில் இன்னும் முழுமையாக சாதகமாக இல்லை. அதனால்தான் இந்தியாவின் வளர்ச்சிக் கதை இன்னும் நிறைவுபெறாத கதையாகவே உள்ளது.
கட்டுரையாளர் குறிப்பு

முதன்மை விஞ்ஞானி, வளர்ச்சித் துறை ஆய்வாளர், எம். எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையம்.
தொடர்புக்கு: gopidina@gmail.com









