“100 தவறான செயல்களை செய்தாவது மனைவியை பராமரிக்க வேண்டும்”- மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!

By Mathi

|

Published on 4 Nov 2026, 8:59 AM

“நூறு தவறான செயல்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் வயதான பெற்றோர், நல்லொழுக்கமுள்ள மனைவி, சிறு வயது மகனைப் பராமரிக்க வேண்டும்” என்ற மனுஸ்மிருதியின் சுலோகத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளது. அத்துடன் மனைவிக்குப் பராமரிப்புத் தொகையை அதிகரிக்கக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி பிரவீன் குமார் கிரி, மனைவியைப் பராமரிப்பது கணவரின் சட்டப்பூர்வக் கடமை மட்டுமல்ல, புனிதமான கடமையும்கூட என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பிங்கி வர்மா, தனது கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கான்பூர் குடும்பநல நீதிமன்றம், பிங்கி வர்மாவுக்கு மாதம் ரூ.19,000 பராமரிப்புத் தொகை வழங்க கடந்த 2025 டிசம்பர் 22-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால், தனது கணவரின் வருமானத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்றும், தனக்கும் தனது மைனர் குழந்தைக்கும் மாதம் ரூ.40,000 வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் பிங்கி வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த மனுவை நீதிபதி பிரவீன் குமார் கிரி விசாரித்தார். பிங்கி வர்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திவாஸ் வர்மா, ”அவரது கணவர் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்; மேலும், கணவரின் சம்பளத்தில் 25 சதவீதத்தை மனைவிக்குப் பராமரிப்புத் தொகையாக வழங்குவது நியாயமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது” என சுட்டிக்காட்டினார்.

மேலும், ”கடன் தவணை உள்ளிட்ட தனிப்பட்ட நிதிப் பொறுப்புகளுக்காகச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையைக் காரணம் காட்டி, மனைவியைப் பராமரிக்கும் கடமையிலிருந்து கணவர் விலக முடியாது” என்றும் வாதிட்டார்.

ADVERTISEMENT

இதற்காக 1970-ஆம் ஆண்டு குல்பூஷண் குமார் எதிர் ராஜ்குமாரி, 2017-ஆம் ஆண்டு கல்யாண் டே சவுத்ரி எதிர் ரீட்டா டே சவுத்ரி மற்றும் 2026-ஆம் ஆண்டு தீபா ஜோஷி எதிர் கவுரவ் ஜோஷி ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

குறிப்பாக, கடன் வாங்கி சொத்துகளை உருவாக்குவதற்காகச் செலுத்தப்படும் தவணைகளை, தவிர்க்க முடியாத வாழ்க்கைச் செலவுகளாகக் கருத முடியாது என்று தீபா ஜோஷி வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததையும் வாதமாக முன்வைத்தார்.

ADVERTISEMENT

எனவே, கணவரின் மொத்த சம்பளத்தில் வருமான வரியை மட்டும் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையில் 25 சதவீதத்தைப் பராமரிப்புத் தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் திவாஸ் வர்மா வாதிட்டார்.

அதே நேரத்தில் கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போலே ராம், தனது கட்சிக்காரருடன் மனைவியும் மைனர் மகளும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும், சம்பளத்தில் 25 சதவீதத்தைப் பராமரிப்புத் தொகையாகப் பிடித்தம் செய்வதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிபதி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரவீன் குமார் கிரி, மனைவி, மைனர் குழந்தைகள் மற்றும் பெற்றோரைப் பராமரிப்பது தொடர்பாக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார்.

“தங்களைத் தாங்களே பொருளாதார ரீதியாகப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நல்லொழுக்கமுள்ள மனைவி, மைனர் குழந்தைகள் மற்றும் பெற்றோரைப் பராமரிப்பது கணவரின் சட்டப்பூர்வக் கடமை மட்டுமல்ல; புனிதமான கடமையும்கூட” என்று நீதிபதி கூறினார். (This Court observes that not only legal but a pious obligation is upon the husband to maintain his chaste wife, minor children and parents, if they are financially unable to maintain themselves).

இதற்கு ஆதாரமாக 2022-ஆம் ஆண்டு அஞ்சு கார்க் மற்றும் மற்றொருவர் எதிர் தீபக் குமார் கார்க் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவையும், அதற்குப் பதிலாக நடைமுறைக்கு வந்த பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 144-வது பிரிவையும் குறிப்பிட்டார்.

100 தவறான செயல்களை செய்தாவது.. மனுஸ்மிருதி சொல்வது என?

அத்துடன் மனுஸ்மிருதியின் 11-வது அத்தியாயம், 10-வது சுலோகத்தையும் தனது தீர்ப்பில் இடம்பெறச் செய்தார்.

அந்த சுலோகத்தில்,

“वृद्धौ च मातापितरौ साध्वी भार्या सुतः शिशुः ।
अपकार्यशतं कृत्वा भर्तव्या मनुर्ब्रवीत ॥”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, “வயதான பெற்றோர், நல்லொழுக்கமுள்ள மனைவி, சிறு வயது மகன் ஆகியோரைப் பராமரிக்க வேண்டும். அதற்காக நூறு தவறான செயல்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று மனு கூறியுள்ளார் (”Aged parents, a virtuous wife, and an infant son must be maintained (supported), even by performing a hundred misdeeds (improper actions)- so said Manu)” என்பதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?

அஞ்சு கார்க் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளையும் நீதிபதி தனது உத்தரவில் விரிவாக மேற்கோள் காட்டியுள்ளார். அதில், மனைவி மற்றும் மைனர் குழந்தைகளுக்குப் பொருளாதார உதவி வழங்குவது கணவரின் முக்கியமான கடமை என்றும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் கணவர் உடல் உழைப்பின் மூலமாகவாவது வருமானம் ஈட்டி இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டம் அனுமதிக்கும் காரணங்களைத் தவிர வேறு காரணங்களைக் கூறி இந்தப் பொறுப்பிலிருந்து கணவர் தப்ப முடியாது.

பராமரிப்புத் தொகை வழங்குவதன் நோக்கம், கடந்த காலத்தில் மனைவியைப் புறக்கணித்த கணவரைத் தண்டிப்பது அல்ல. கணவரால் கைவிடப்பட்ட மனைவி உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் நிலையைத் தடுப்பதுதான். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவு பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சமூகநீதிச் சட்டமாகும். இது அரசியல் சாசனத்தின் 15(3) மற்றும் 39-வது பிரிவுகளுடன் தொடர்புடையது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்ய உத்தரவு

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி பிரவீன் குமார் கிரி, பிங்கி வர்மாவுக்கு மாதம் ரூ.19,000 வழங்க வேண்டும் என்ற குடும்பநல நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாற்றியமைத்தார். இந்தியன் வங்கியில் பணிபுரியும் கணவரின் மொத்தச் சம்பளத்தில் வருமான வரிக்கான பிடித்தத்தை மட்டும் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையில் 25 சதவீதத்தைப் பராமரிப்புத் தொகையாகப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்தத் தொகையை பிங்கி வர்மாவின் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதற்கான உத்தரவை உன்னாவ் மாவட்ட இந்தியன் வங்கியின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு கான்பூர் குடும்பநல நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த அக்டோபர் 22-ந் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel