ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. கூட்டுறவு கடைகளில் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’

By Mathi

|

Published on 4 Nov 2026, 7:42 AM

Vijay-Vetri Vegetable Kit

தமிழ்நாட்டில் அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை (நவம்பர் 5) முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை நவம்பர் 3-ந் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருநெல்வேலிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பூங்கா நகர், காஞ்சிபுரம், வடசென்னை மற்றும் மதுரை கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மூலம் இந்தக் காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது.

ஒவ்வொரு தொகுப்பிலும் மேற்கண்ட காய்கறிகள் குறிப்பிட்ட எடையில் இருக்க வேண்டும். காய்கறிகளின் எண்ணிக்கையையோ எடையையோ மாற்றக்கூடாது. தேங்காயின் எடை 400 முதல் 450 கிராமுக்குள் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே

ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலை குழுவால் நிர்ணயிக்கப்படும். இதனுடன் ஒரு தொகுப்புக்கு ரூ.2.50 என்ற அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது. கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 ஆகியவற்றைக் கணக்கிட்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சிறப்பு விற்பனையை மேற்கொள்வதற்கான நிலையான நடைமுறை வழிகாட்டுதல்களை (SOP) கூட்டுறவு கல்வி நிதி மானியம் கோருதல் உள்ளிட்ட விவரங்களுடன் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. நவம்பர் 5 முதல் 7-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை நடைபெறும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel